Sunday, October 16, 2005

1] ஜகாத் ஒரு மறு ஆய்வு - முன்னுரை

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்

"ஒரு பொருளுக்கு ஒரு முறை தான் ஜகாத்" என்ற கருத்தை மிக சமீப காலமாக தமிழகத்தில் மட்டும் சிலர் கூறி வருவதை தமிழ் பேசும் அனை வரும் நன்கு அறிவர். இது தவறான கருத்துதான் என உறுதியாக அறிந்திருந்த பலரும், அதனை பகிரங்கமாக எதிர்க்க முடியாமல் மௌனம் காத்தனர்.

ஓய்வு நேரங்களில் ஊதியமின்றி அழைப்புப் பணி செய்துவரும் நான், இது குறித்து "ஓர் ஆய்வரங்கு" நடத்த பல முறை முயற்சித்தேன். தாயிஃபில் (சவுதி அரேபியா) அல் சலாமா இஸ்லாமிய நிலையத்தார் வெளியிடும் "நேர் வழி" என்ற தமிழ் மாத இதழில் இதற்கான அறிவிப்பும் செய்யப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் இந்த ஆய்வரங்கு தடைப்பட்டு விட்டது.

அதன் பிறகும் என் முயற்சியை கை விடாமல், "ஆய்வுக் கட்டுரைகளாக எழுதித்தாருங்கள் "நேர் வழி" இதழில் பிரசுரிப்போம்" என்று தனிப்பட்ட முறையில் சில அறிஞர்களிடம் கேட்டிருந்தேன். ஆரம்பத்தில் ஒப்புக் கொண்ட பல அறிஞர்கள், அவகாசம் இல்லை என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்கள்.

ஆய்வுக் கட்டுரையாக "நேர் வழி" இதழில் விரைவில் வெளிவரும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருந்ததால், வாசக அன்பர்கள் மிக ஆவலோடு எதிர் பார்த்து இறுதியில் ஏமாற்றம் அடைந்து, தொலைபேசியின் மூலம் என்னைத் தொடர்பு கொண்டு, விளக்கம் கேட்க ஆரம்பித்தனர்.

எனவே, நானே இது குறித்து ஆய்வு செய்வதென முடிவெடுத்து, எதிர் தரப்பினர் எடுத்து வைக்கும் சான்றுகளை சரிகாணும் பணியைத் துவங்கினேன். "ஜகாத் வழங்குவது பொருளைத் தூய்மைப்படுத்துகிறது" என்று இறைத்தூதர் கூறியுள்ளார்கள். ஆகையால், தூய்மை அடைந்து விட்ட பொருளை மீண்டும் தூய்மைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை முதன்மைச் சான்றாக முன்னிறுத்தி பல ஊர்களில் பிரச்சாரம் செய்து வந்ததை ஜகாத் ஒர் ஆய்வு என்ற அவர்களது தொகுப்பு சி.டி. யின் மூலம் அறிந்து கொண்டேன்.

இவர்கள் கூறி வந்த இந்நபி மொழியின் தரத்தை புரிந்து கொள்ள வேண்டுமே என நபிமொழித் தொகுப்புகளை புரட்டிய போது, இது நபி மொழியே அல்ல என்ற மாபெரும் உண்மை அப்போது வெளிச்சத்திற்கு வந்தது. அதனை வெள்ளி மேடையின் மூலம் தாயிஃப் வாழ் தமிழ் பேசும் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்திய போது, ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தும் விதமாக, கூச்சலிட்டு கலகம் செய்தார்கள். சில மார்க்க அறிஞர்களே நாம் கூறியதை ஏற்க மறுத்து எதிர் வாதம் செய்தனர். ஆனால், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையான ஆர்வமும் அக்கறையும் கொண்ட அதிகமானோர் இறைத்தூதர் கூறாத செய்தியை இவ்வளவு துணிச்சலாக பேசியுள்ளார்களே என்ற அதிர்ச்சியில் உறைந்தே போனார்கள்.

ஆதரவாளர்களில் சிலர், செய்தியை மேலிடத்திற்கு எடுத்துச் சென்ற போது, இதற்கான பதில் விரைவில் உணர்வு வார இதழில் தருகிறோம் என்று சமாதானம் கூறினார்கள். நான்கு மாதம் ஆகியும் ஒரு பதிலையும் காணாததால் தலைமையகத்தின் மீது வெறுப்பு கொண்டு ஏமாற்றத்தின் உச்சிக்கே பலர் சென்று விட்டனர். இறைத்தூதர் மீது இட்டு கட்டிப் பேசுவோர் நடத்திவரும் இயக்கத்தில் இனிமேலும் இரூக்கக் கூடாது என முடிவு செய்து இயக்கத்தை விட்டே பலர் வெளியேறி விட்டனர். இந்த அதிர்ச்சியினால், அவரசரக் கோலத்தில், "ஆய்வு" என்ற பெயரில் பல நாட்கள் ஒன்று கூட்டி, தங்களின் ஆதரவாளர்களை சமாதானப்படுத்துவதும் முயற்சியாக முரண்பட்ட பல செய்திகளை ஏகோபித்த முடிவு (இஜ்மா) என்று கூறி "ஏகத்துவம்" (செப்-05) மாத இதழில் வெளியிட்டார்கள். பல உண்மைகளை மறைத்தும், சான்றுகளை திரித்தும் அதில் எழுதி இருந்தார்கள். நாம் கேட்டிருந்த நியாயமான கேள்விக்கான பதிலை அறவே குறிப்பிடவில்லை. எதை எதையோ கூறி சொதப்பி, பிரச்சனையை திசை திருப்ப முனைந்துள்ளது மிகவும் தெள்ளத் தெளிவாகவே தெரிந்தது.

இனிமேலும், இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது இந்தச் செய்தியை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்று வீரியத்தோடு அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்து, களத்தில் இறங்கினேன்.

"பொருளைத் தூய்மைப்படுத்தக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான்" (துஹ்ரத்தன் லில் அம்வால்) என்பதை இறைத் தூதர் கூறியதாக நிரூபித்தால் ரூ 2 இலட்சம் பரிசளிக்கப்படும் என்று அவர்களது பாணியில் (அவர்கள் புரிந்து வைத்துள்ள பாணியில்) அறிவிப்பு வெளியிட்டேன். இதற்கு பதிலளிக்க முடியாமல், பிரச்னையை திசை திருப்ப, தனி நபர் பற்றிய தரங்கட்ட விமர்சனத்தையே பதிலாகத் தந்தார்கள்.

இதற்கு பதில் எழுதுவதற்காக விலை மதிக்க முடியாத என் நேரத்தை ஒதுக்குவதை விட, உண்மைகளை விளக்கி ஒரு நூலாக வெளியிடுவோம். சத்தியத்தை அறிந்து கொள்ள ஆசை உள்ளவர்களுக்கு அது பயனளிக்கும் என்று கருதி இந்த சிறிய நூலைத் தயாரித்து மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கிறேன். இச்சிறிய நூல் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையவும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.

இந்நூல் உருவாக துணைபுரிந்த அல்லாஹ்விற்கு முதலில் என் நன்றியை உரித்தாக்குகிறேன். அரிய பல ஆலோசனைகளையும் தேவையான திருத்தங்களையும் சுட்டிக்காட்டி, அவசியமான சான்றுகளை எடுத்துக் கூறி நினைவூட்டிய சகோதரர்கள் பலருக்கும் என் ஆழ் மனதின் நன்றியை உரித்தாக்கிக் கொள்கின்றேன். குறிப்பாக என் பிரதான ஆசிரியரும் ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர் நூற்களை தமிழாக்கம் செய்யும் குழுவின் தலைவருமான மௌலவி முஹம்மது கான் ஃபாஜில் பாகவி அவர்களுக்கும், யூசுப் மிஸ்பாஹி, ஹதீஸ் கலையில் டாக்டர் பட்டம் பெற்ற இலங்கை மௌலவி அஹ்மது அஷ்ரஃப், சகோதரர் சயீத், மருத்துவர்களான ஷேக் சையது அலி, ரஃபீக் அன்வர், மற்றும் சகோதரர் ஹாஜா முகைதீன், மௌலவி நிஜாமுத்தீன் பாகவி, பெயர் கூற விரும்பாதோர் என அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அதிகளவு நன்மைகளை வாரி வாரி வழங்கி, உயர் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்ய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனையும் செய்து கொள்கிறேன்.

குர்ஆன் மற்றும் நபி மொழியின் அடிப்படையில் எழுதப்பட்ட இச்சிறிய நூலை விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு படித்துப் பார்க்க அன்புடன் வேண்டுகிறேன். குறை, நிறைகளை சுட்டிக் காட்டுவோருக்கு முன் நன்றியையும் கூறிக் கொள்கிறேன்.

தொடர்புக்கு:
மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி
தபால் பெட்டி எண்: 204, தாயிஃப்.
செல்: 0509746919.

மின்னஞ்சல்: fazilbaqavi@gmail.com

குறிப்பு: "துஹ்ரத்தன் லில் அம்வால்" என்ற வாசகம் உள்ளடங்கிய (அவர்கள் ஹதீஸ் எனக் கூறி வந்த) செய்தியை நபிமொழி என நிரூபித்தால் ரூபாய் 2 லட்சம் பரிசளிக்கப்படும் என்ற நமது சவால் தொடர்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.