21] அபூதாவூதில் இடம் பெற்ற பலவீனமானதா?
அபூதாவூதில் இடம் பெற்ற இந்நபி மொழி பலவீனமானதா?
"வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும்" என்று நபி மொழியில், அபூ தாவூதில் இடம் பெற்றிருக்கும் அறிவிப்பாளர் வரிசையைத் தவிர, தப்ராணி, பைஹகி, புகாரியின் தாரீக் அல்கபீர், முஃஜம் ஸஹாபா, அல் ஆஹாது வல் மஃதானி ஆகிய பல்வேறு ஹதீஸ் நூட்களில் உள்ள அறிவிப்பாளர் வரிசையில் பலவீனமா னவர்கள் இடம் பெற்றுள்ளதால், அவற்றை நாம் ஆதாரமாகக் காட்டவில்லை.
(வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று உலகில் எந்த நூலிலும் ஹதீஸ் இல்லை. எடுத்துக் காட்டுவோருக்கு ஒரு இலட்ச ரூபாய் பரிசு' என்று அறிவிப்புச் செய்தார்கள். ஆனால், அபூதாவூதில் உள்ள இந்த ஹதீஸை எடுத்துக் காட்டிய போது அதனை பலவீனம் என்று கூறக் காரணம் தேடுகிறார்கள்.)
பலவீனம் என்று கூறுவோர், இந்நபி மொழியின் மீது மூன்று குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். அக்குற்றச்சாட்டுகளையும், அதற்கான பதிலையும் விரிவாக அறிந்து கொள்வோம்.
قال أبو داود وقرأت في كتاب عبد الله بن سالم بحمص عند آل عمروبن الحرث الحمصي عن الزبيدي قال وأخبرني يحيى بن جابر عن جبير بن نفير عن عبد الله بن معاوية الغاضري
குற்றச்சாட்டு -1
'கோடிட்டு காட்டப்பட்ட யஹ்யா பின் ஜாபிர் என்பவர், ஜுபைர் பின் நுஃபைர் என்பவரிடம் நேரிடையாக இந்த ஹதீஸைக் கேட்கவில்லை. இவ்விருவருக்குமிடையில் அறிவிப்பாளர் ஒருவர் விடுபட்டுள்ளார். அதனால் அது தொடர்பறுந்த(முன்கதிஃ) ஹதீஸாகும்.' ஆகையால், இது பலவீனமானது.
பதில் -1
ஸஹீஹ் என்பதனை சரிகாணல்:
அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார் என்பது உண்மையே. எனினும், அறிவிப்பாளர் விடுபட்டிருப்பதால் மட்டும் ஒரு ஹதீஸ் பலவீனமானது என்ற முடிவுக்கு வரக்கூடாது. விடுபட்டவர் யார்? என அறவே தெரியவில்லை அல்லது விடுபட்டவர் பலவீனமானவர் என கண்டுகொள்ளப்பட்டது போன்ற சூழ்நிலையில் மட்டும் அந்த நபி மொழி பலவீனமானது என்று உறுதியாக முடிவு எடுக்க முடியும்.
விடுபட்டவர் நம்பகமானவர் என வேறு சான்றுகளின் மூலம் அறிந்து கொள்ளப்படுமேயானால், அல்லது வேறோர் தொடரில் அறிவிப்பாளர் விடுபடாமல் அறிவிக்கப்பட்டிருந்தால் அப்போது அதனை பலவீனமானது என ஒதுக்கிவிட முடியாது.
அபூதாவூதில் உள்ள நபி மொழியின் அறிவிப்பாளர் வரிசையில் யஹ்யா பின் ஜாபிர் என்பவருக்கும் ஜுபைர் என்பவருக்குமிடையில் விடுபட்டவர், அப்துர்ரஹ்மான் என்பவர் ஆவார் என்பதை வேறு நூட்களில் இடம் பெற்ற அறிவிப்புகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. 'இவர், இதே அறிவிப்பில் இடம் பெற்ற ஜுபைர் என்பவரின் மகனாவார். இவர் நம்பகமானவர்' என ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவரும் கூறுகின்றனர். ஆகையால், இது ஸஹீஹானது தான் என இக்கலை அறிஞர்கள் பலரும், குறிப்பாக சமீபத்தில் தோன்றிய ஹதீஸ் ஆய்வாளர்களில் சிறந்து விளங்கும் நாஸிருத்தீன் அல்பானியும் ஏற்றுள்ளனர். அர்னாவூத் என்பவர் ஹஸன் என்ற தரத்தில் உள்ளது எனக் கூறுகிறார்.
மேலும், அபூதாவூதின் இன்னொரு ஒரிஜினல் பிரதியில் எந்த அறிவிப்பாளரும் விடுபடாமல் தொடர்ச்சியா கவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை இப்னு ஹஜர் அவர்கள் தன் வசம் இருந்து வந்த வேறொரு மூலப் பிரதியின் மூலம் 'அல் இஸாபா' என்ற தனது நூலில் இனம் காட்டியுள்ளார். "நமது கைவசம் உள்ள அபூ தாவூதின் பிரதிகளில் எழுதுவோர் தவறினால் அப்துர் ரஹ்மான் விடுபட்டுள்ளார். 'இஸாபா' என்ற நூலில் இப்னு ஹஜ்ர் அவர்கள் எடுத்துக் காட்டிய அறிவிப்புதான் சரியானதாகும்" என அபூதாவூதின் விரிவுரையாளர், 'அவ்னுல் மஃபூத்' எனும் தனது நூலில் இதை உறுதிப்படுத்துகிறார். (இஸாபா என்ற நூலையும், அவ்னுல் மஃபூத் என்ற நூலில் மேற்கூறிய நபி மொழியின் விளக்க உரையையும் காண்க!)
மேற்கண்ட விளக்கத்தின்படி அறிவிப்பாளர் தொடரில் யாரும் விடுபடவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, அபூதாவூதில் இடம்பெற்ற ஹதீஸ் முன்கதிஃ (தொடர்பறுந்தது) எனக் காரணம் காட்டி பலவீனமானது என்று ஒதுக்க முடியாது.
குற்றச்சாட்டு-2
"அபூதாவூத் அவர்கள் தமக்கு அறிவித்தவரைக் கூறவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தாரிடம் அப்துல்லாஹ் பின் ஸாலிமுடைய ஏடு இருந்தது. அதில் வாசித்தேன் எனக் கூறி மேற்கண்ட ஹதீஸைப் பதிவு செய்கிறார்கள். அப்துல்லாஹ் பின் ஸாலிம் அவர்களின் ஏட்டை அப்துல்லாஹ் பின் ஸாலிமிடமிருந்து அபூதாவூத் வாசிக்கவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் என்பாரின் குடும்பத்தாரிடம் வாசித்தேன் என்று கூறு கின்றார். அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தார் என்றால் யார்? அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது? அப்துல்லாஹ் பின் ஸாலிம் என்பாரின் ஏடு என்று கூறி வேறு எதையாவது காட்டக் கூடியவர்களா? என்ற விபரம் ஏதுமில்லை. ஒருவரின் குடும்பத்தார் என்பது அவரது தாய், தந்தை, அண்ணன், தம்பி, மனைவி, மக்கள் என பலரையும் குறிக்கக் கூடியது. அம்ரு பின் ஹாரிசுடைய குடும்பத்தார் யார் என்பதும், அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது என்பதும் நிரூபணமாகவில்லை என்பதால் இது பலவீனமானதாகும். மேலும் அம்ரு பின் ஹாரிசுடைய நம்பகத்தன்மையே நிரூபிக்கப் படவில்லை. தஹபீ அவர்கள் இவரது நேர்மை நிரூபணமாக வில்லை என்று கூறுகின்றார். நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத ஒருவரின் குடும்பத்தார் வைத்திருந்த ஏட்டில் வாசித்தேன் என்று அபூதாவூத் கூறுவதிலிருந்தே இதன் பலவீனம் தெளிவாகத் தெரிகின்றது."
அம்ர் பின் ஹாரிஸ் நேர்மை நிரூபணமாகாதவாரா?
ஸஹீஹ் என்பதனை சரிகாணல்:
'அம்ர் பின் ஹாரிஸின் நம்பகத் தன்மை நிரூபணம் ஆக ல்லை' என தஹபி கூறுவதாக அவர்கள் எழுதிய தகவல், உண்மைக்குப் புறம்பானதாகும். தஹபி அவர்கள் எந்த இடத்திலும் அவ்வாறு கூறவில்லை. மாறாக 'மீஜானுல் இஃதி லால்' என்ற நூலில் அவர் கூறியதை திரித்து மொழி பெயர்த்துள்ளனர். தஹபி கூறிய வாசகம்:
لا تعرف عدالته))
அவரது நேர்மை அறியப்படவில்லை.
'நேர்மை அறியப்படவில்லை' என்ற வாசகத்திற்கும், 'நேர்மை நிரூபணமாக வில்லை' என்ற வாசகத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. 'அறியப்படவில்லை' என்ற வாசகத்தின் மூலம் நம்பகமானவரா? என்பது தஹபிக்கு தெரியாது என்றே புரிந்து கொள்ளப்படும். 'நிரூபணம் ஆகவில்லை' என்று அர்த்தம் செய்வதாக இருந்தால்,
(لاتـثبت عدالته)
என்று கூறி இருக்க வேண்டும். அவ்வாறு தஹபி அவர்கள் ஒரு இடத்திலும் கூறவில்லை. பொய்யுரைக்கக் கூடியவர், மனன சக்தி குன்றியவர், மறுக்கப்பட வேண்டியவர் போன்ற அவரை குறைப்படுத்துகின்ற காரணங்களையும் தஹபி அறியவில்லை. எனவேதான், 'அவரது நேர்மை அறியப் படவில்லை' என்று கூறி முடித்துக் கொண்டார்.
மேலும், ஹிஜ்ரி 720ல் தங்களது 48வது வயதில் எழுதிய அல் காஷிஃப் என்ற நூலில் 'அமர் பின் ஹாரிஸ் நம்பகமானவராக கருதப்பட்டுள்ளார்' என்று பதிவு செய்து, தனது முந்திய கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இச்செய்தி அவர்களுக்கு எதிராக அமைந்திருப்பதால் வசதியாக அதை மறைத்தே விட்டார்கள். காஷிஃபில் பதிவான செய்தி இதோ!
عمرو بن الحارث بن الضحاك الحمصي عن عبد الله بن سالم وعنه إسحاق زبريق وثق د الكاشف ج2/ص73
.... அம்ர் பின் ஹாரிஸ் ...நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார். அல் காஷிஃப். 2/73
(தொழுகையில் விரல் அசைப்பதற்கு இவர்கள் ஆதாரமாக எடுத்து வைக்கும் ஹதீஸை அறிவிக்கக்கூடிய 'குலைப்' என்பவரின் நம்ப கத்தன்மையை (وثق) என்ற வார்த்தையின் மூலம்தான் இமாம் தஹபி விமர்சனம் செய்துள்ளார். தஹபியின் ஒரே மாதிரியான விமர்சனத்தை குலைப் விஷயத்தில் ஏற்றுக் கொண்டவர்கள், அம்ர்பின் ஹாரிஸ் விஷயத்தில் ஏற்க மறுப்பதும், மறைப்பதும் ஏன்?)
அம்ர் பின் ஹாரிஸ் குறித்து தஹபி அவர்கள் இருவேறு கருத்துகளை கூறியுள்ளார். இதில், நம்பகமானவர் என்ற கருத்தே பிந்தியதாகும். 'நேர்மை அறியப்படவில்லை' என்ற கருத்துதான் பிந்தியது என ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், தஹபி அறியவில்லை என்று கூறியதால், உலகில் உள்ள யாருக்கும் அமர் பின் ஹாரிஸ் அறியப்படாதவர் என்று ஆகி விடுமா?.
'இமாம் திர்மிதி அவர்கள் அறியப்படாதவர்' என பிரபல ஹதீஸ் கலை அறிஞர் இப்னு ஹஸ்ம் கூறியதாக தஹபின் மிஜானுல் இஃதிலால் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இப்னு ஹஸ்ம் இவ்வாறு கூறியதால், இமாம் திர்மிதி அவர்கள் யாருக்கும் அறியப்படாதவர் என்று ஆகிவிட்டாரா?
காரணம், அறிவிப்பாளர்கள் ஆய்வில் தஹபியை விட சிறந்து விளங்கிய இப்னு ஹிப்பான் அவர்கள், 'அம்ர் பின் ஹாரிஸ் நேர்மையான அறிவிப்பாளர்' என 'ஃதிகாத்' எனும் தனது நூலில் சான்று தருகிறார். 'அம்ர் பின் ஹாரிஸ் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்' என இமாம் இப்னு ஹஜ்ர், 'தக்ரீப் தஹ்தீப்' எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
அல் ஜர்ஹ் வத்தஃதீல் என்ற நூலிலும், தஹ்தீபுல் கமால் என்ற நூலிலும் அம்ர் பின் ஹாரிஸின் வரலாறு கூறபட்ட இடத்தில் அவர் குறித்து ஒரு குறையும் பதிவு செய்யப்படவில்லை.
திரிப்பு வேலையில் ஈடுபட்டு மக்களை திசை திருப்பாமல் இருக்க அம்ர் பின் ஹாரிஸ் பற்றி இக்கலை அறிஞர்கள் கூறியதை அவர்களின் நூலிலிருந்து அப்படியே அரபி மூலத்துடன் தந்துள்ளோம்.
[5001] عمرو بن الحارث بن الضحاك الزبيدي بضم الزاي الحمصي مقبول من السابعة بخ د تقريب التهذيب ج1/ص419
[4136] عمرو بن الحارث بن الضحاك الحمصي عن عبد الله بن سالم وعنه إسحاق زبريق وثق د الكاشف ج2/ص73
14548 عمرو بن الحارث بن الضحاك الحمصي يروى عن عبد الله بن سالم الأشعري عن الزبيدي روى عنه إسحاق بن إبراهيم بن العلاء بن زبريق وأهل بلده مستقيم الحديث (الثقات لإبن حبان)
4339 بخ د عمرو بن الحارث بن الضحاك الزبيدي الحمصي وعداده في الكلاعيين روى عن عبد الله بن سالم الأشعري الحمصي بخ د روى عنه إسحاق بن إبراهيم بن العلاء الزبيدي المعروف بزبريق بخ ومولاته علوة وقال محمد بن عوف الطائي د قرأت في كتاب عمرو بن الحارث ذكره بن حبان في كتاب الثقات روى له البخاري في الأدب وأبو داود ( تهذيب الكمال)
1253 عمرو بن الحارث بن الضحاك الزبيدي الحمصي روى عن عبد الله بن سالم الأشعري روى عنه إسحاق بن إبراهيم بن العلاء بن الضحاك الزبيدي سمعت أبى يقول ذلك (الجرح والتعديل)
இப்னு ஹிப்பான் கூறுவது தவறா?
'ஒருவரை நம்பகமானவர்' என்று கூறுவதில் இப்னுஹிப்பான் கவனக் குறைவாகவும், தனக்கு தெரியாத வர்களையும் கூட நம்பகமானவர் என்று கூறிவிடுவார் என்றொரு குற்றச்சாட்டு இப்னு ஹிப்பான் மீது கூறப்படுகிறது. அதனைக் காரணம் காட்டி, அம்ர் பின் ஹாரிஸ் விஷயத்தில் இப்னு ஹிப்பான் கூறிய கருத்தை புறக்கணிக்க முயற்சி செய்யலாம். எனவே, அதற்கான பதிலையும் நாம் சொல்லித்தான் ஆக வேண்டும்.
இக்குற்றச்சாட்டு பொதுவானதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் பயன்படுத்துகின்ற வாசகத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்ய வேண்டும் என அல் முஅல்லிம் அல் யமானி என்ற இக்கலை அறிஞர், அத்தன்கீல் பிமாஃபி தஃனீபில் கவ்ஃதரி என்ற தனது நூலின் முதல் பாகத்தில் 66, 437, 438 ஆகிய பக்கங்களில் கூறி விட்டு, இப்னு ஹிப்பான் 'நம்பகமா னவர்' என்று கூறுவோரை ஐந்தாக வகைப்படுத்துகிறார்.
إن توثيق إبن حبان على درجات:
الأولى: أن يصرح به كما أن يقول كان متقناً أو مستقيم الحديث أو نحوه. (2) أن يكون الرجل من شيوخه الذين جالسهم وخبرهم. (3) أن يكون من المعروفين بكثرة الحديث بحيث يعلم أن إبن حبان وقف له على أحاديث كثيرة. (4) أن يظهر من سياق كلامه أنه قد عرف ذلك الرجل معرفة جيدة.
(5) ما دون ذلك.
فالأولى لا تقل عن توثيق غيره من الأئمة بل لعلها أثبت من توثيق كثير منهم. والثانية قريبة منها. والثالثة : مقبولة. والرابع صالح. والخامسة لا يؤمن فيها الخلل. (التنكيل بما في تأنيب الخطيب الكوثري من الأباطيل ج1/438,437,66 )
'நம்பகமானவர்' என இப்னு ஹிப்பான் அவர்கள் கூறுவது பல (5) படித்தரங்களை கொண்டுள்ளது.
1. 'மிக்க உறுதியானவர்', 'நேர்மையான அறிவிப்பாளர்' போன்ற தெளிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி உறுதி செய்பப்பட்டவராக இருப்பர்.
2. அவர்களுடன் அமர்ந்து அவர்களைப் பற்றி நன்கு அறிந்து கொண்ட இப்னு ஹிப்பானின் ஆசிரியர்களாக இருப்பர்.
3. அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பவர்கள் என இப்னு ஹிப்பான் அவர்களால் அறிந்து கொள்ளப்பட்டவர்களாக இருப்பர்.
4. இப்னு ஹிப்பான் பயன்படுத்துகின்ற வாசகத்தின் மூலம், அவர்களை இவர் நன்கு அறிந்து கொண்டுள்ளார் என்பது விளங்கும்.
5. மேலே கூறப்பட்ட தரத்தில் எதிலும் இடம் பிடித்தவர்களாக இருக்கமாட்டர்.
இந்த ஐந்து வகையில், முதல் முறையில் கூறப்பட்டிருப்பவர்கள், ஹதீஸ் கலையின் மற்ற அறிஞர்களின் 'நம்பகமானவர்' என்ற கூற்றுக்கும் குறைந்ததல்ல. இன்னும் சொல்லப்போனால், இக்கலை அறிஞர்களின் அதிகமானோரின் கூற்றை விடவும் இப்னு ஹிப்பானின் இவ்வகையான கூற்று மிக உறுதியானதாகும். (அம்ர் பின் ஹாரிஸ் விஷயத்தில் முதல் வகையான வாசகத்தை குறிப்பிட்டே அவரது நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது)
இரண்டாவது வகை இதற்கு நெருக்கமானதாகும். (அதனையும் சான்றாக ஏற்கலாம்.)
மூன்றாவது வகை 'ஒப்புக்கொள் ளப்பட்டவர்' என்ற தரத்தில் உள்ளவர்(அதாவது வேறொருவர் சான்றளித்தால் அவர் ஏற்றுக் கொள்ளப்படுவார் என்பது அதன் அர்த்தம்.)
நான்காவது 'பராவாயில்லாதவர்' என்ற தரத்தில் உள்ளவர்.
ஐந்தாவது வகையினர் குறைபாடுகள் இல்லாதவர்கள் என கூறமுடியாது. (தன்கீல்:1/66, 437, 438.)
இந்த வகையில் முதல் வகையைச் சார்ந்தவர்தான் அம்ர் பின் ஹாரிஸ் என்பவர். எனவே, அவரை பலவீன மானவர் எனக் கூறி தவிர்க்க முடியாது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
எனவே, இப்னு ஹிப்பான் ஒருவரை நல்லவர் என்று கூறினால், அதை ஏற்க கூடாது என பொத்தாம் பொதுவாகக் கூற முடியாது.
மேலும், தஹ்தீபுல் கமாலின் ஆசிரியர், இப்னு ஹிப்பான் கூறியதை ஏற்று தனது நூலிலும் பதிவு செய்துள்ளதன் மூலம், அம்ர் பின் ஹாரிஸ் நேர்மையானவர், நம்பகமானவர் என்பதை தஹ்தீபுல் காமாலின் ஆசிரியரும் உறுதி செய்கிறார். இவ்வாறு, இப்னு ஹிப்பான், இப்னு ஹஜர், அபுல் ஹுஜ்ஜாஜ், தஹபி ஆகிய பலரும் அம்ர் பின் ஹாரிஸ் அவர்களின் நம்பகத் தன்மையை குறை கூறாத போது, இவர்கள் மட்டும் ஏன் அம்ர் பின் ஹாரிஸ் பற்றி தவறான செய்தியை தந்து மக்களை திசை திருப்ப நினைக்கிறார்கள் என்பதின் மர்மம் அவர்களுக்கே வெளிச்சம்.
அம்ர் பின் ஹாரிஸ் குடும்பத்தார் நம்பகமானவர்களா?
'அப்துல்லாஹ் பின் சாலிமின் ஏட்டை அவரிடமிருந்து நேரிடையாக அபூதாவூத் வாசிக்கவில்லை. அம்ர் பின் ஹாரிஸ் குடும்பத்தாரிடமிருந்து வாசித்ததாகவே இந்த ஹதீஸை தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள். அம்ர் பின் ஹாரிஸின் நம்பகத் தன்மையே நிரூபணம் ஆகாத நிலையில் அவரது குடும்பத்தினரின் நம்பகத்தன்மை எத்தகையது என தெரியாது. இந்நிலையில் வேறொரு ஏட்டை எடுத்துக்காட்டி இதுதான் அப்துல்லாஹ் பின் சாலிமின் ஏடு என அவரது குடும்பத்தார் கூறியிருக்கலாம். இதன் அடிப்படையிலும் அபூ தாவூத்தின் அறிவிப்பு பலவீனம் அடைகிறது" என்பதே அவர்களின் துணைக் குற்றச்சாட்டு.
பதில்:
அம்ர் பின் ஹாரிஸின் குடும்பத்தினர் நம்பகமானவர்களா? இல்லையா? என்ற ஆய்வில் இறங்கினால், புஹாரி, முஸ்லிம் போன்ற எல்லா நூற்களையும் நாம் புறக்கணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம். காரணம் இவர்கள் தங்கள் நூற்களை தொகுத்து தங்களது வீட்டில்தானே வைத்திருந்திருப்பார்கள். அவர்களது குடும்பத்தினரைப் பற்றி சந்தேகம் கொண்டால், இந்நூற்களையும் கூட ஏற்க முடியாதுதான்.
எனவே, நம்பகமான (அம்ர் பின் ஹாரிஸ்) ஒருவரிடம் வேறொரு நம்பகமானவரின் (அப்துல்லாஹ் பின் சாலிம்) நூல் இருந்தது. அந்நூலிலிருந்து அபூதாவூத் அவர்கள் பதிவு செய்த இந்த ஹதீஸை ஏற்கத்தான் வேண்டும். வேறொரு நூலைப் பார்த்து விட்டு, தவறாக பதிவு செய்திருப்பார் என சந்தேகம் கொள்வது அபூதாவூத் அவர்களின் நம்பகத்தன்மையை குறை கூறுவதாக அமையும்.
இவ்வாறு அம்ர் பின் ஹாரிஸின் குடும்பத்தினரிடம் இருந்த நூல் அப்துல்லாஹ் பின் சாலிம் அவர்களின் ஏடுதான்' என தஹபி, (மிஜானுல் இஃதிதால்) அபூதாவூத் ஆகிய இரு நம்பகமானவர்கள் ஊர்ஜிதம் செய்வதால், அப்துல்லாஹ் பின் சாலிம் அவர்களின் நூலை தம்மிடம் வைத்துக் கொண்டு வேறொரு நூலை எடுத்துக்காட்டி இருப்பார்கள் என்பது இவர்களின் வெறும் யூகம் தான். யூகம் எந்த விதத்திலும் பயனளிக்காது என்பது குர்ஆன் வசனம்.
மேலும், 'ஆல்' என்ற வார்த்தை ஒருவரது குடும்பத்தினருக்கு மட்டும் கூறப்படுவது போலவே அவரையும் அவரைச் சேர்ந்தவர்களை குறிக்கவும் பயன்படுத்தவும். அம்ர் பின் ஹாரிஸ் குடும்பத்தினர் எனும்போது அவரும் குடும்பத்தினரில் உள்ளடக்கும். இந்த அடிப்படையில், குடும்பத்தினரிடம் இருந்து வந்த நூல் என்பதற்கு அவரிடம் இருந்து வந்த நூல் எனப் புரிந்து கொள்ளத் தடை ஏதும் இல்லை.
பிறரின் நூலிலிருந்து ஹதீஸை பதிவு செய்வது ஏற்புடையதா?
தனக்கு அறிவிப்பவரை குறிப்பிடாமல் வேறொருவரிடம் இருந்த அப்துல்லாஹ் பின் சாலிமின் ஏட்டிலிருந்து பதிவு செய்ததாக அபூதாவூத் குறிப்பிடுகிறார். இம்முறையில் பதிவு செய்த ஹதீஸை ஏற்கலாமா?
ஒருவரிடம் நேரிடையாக கேட்காமல் அவரின் நூலிலிருந்து பதிவு செய்யப்பட்ட பல ஹதீஸ்களை இமாம் புகாரி, முஸ்லிம் அவர்கள் தங்களது நூற்களில் பதிவு செய்து ள்ளார்கள். 1286-வது ஹதீஸில்
قال مسلم: سمعت يحيى بن يحيى يقول: كتبت هذا الحديث من كتاب سليمان بن بلال.
முஸ்லிம் அவர்கள் கூறுகிறார்கள்:
யஹ்யா பின் யஹ்யா அவர்கள் கூறினார்: இந்த ஹதீஸை (1286) சுலைமான் பின் பிலால் அவர்களின் ஏட்டிலிருந்தே நான் எழுதினேன்.
இம்முறையில் அறிவிக்கப்பட்ட ஹதீஸை 2833, 2965, 3024, 3025, 5828, 7237 ஆகிய இடங்களில் இமாம் புஹாரி பதிவு செய்துள்ளார்கள்.
குற்றச்சாட்டு -3
"இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பவராக அப்துல்லாஹ் பின் முஆவியா அல் காளிரீ என்பாரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் நபித் தோழர் என்று சில நூற்களில் எழுதப்பட்டிருந்தாலும் நபித்தோழர் என்பதை முடிவு செய்வதற்குரிய அளவுகோல் இவருக்குப் பொருந்தவில்லை. நபித்தோழர் என்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபித்தோழர் என்று பரவலாக அறியப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஒரு ஹதீஸில் இவர் பெயர் இடம் பெறுவதைத் தவிர வேறு விபரம் ஏதும் இல்லை. "நான் நபியிடம் கேட்டேன்" என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் அறிவிக்க வேண்டும். இந்த ஹதீஸில், "நான் நபியிடம் கேட்டேன்" என்பது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக நபி சொன்னார்கள் என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அளவுகோலின்படியும் இவர் ஸஹாபி என்பது நிரூபணமாகவில்லை. அல்லது ஒரு நபித்தோழரோ அல்லது ஒரு தாபியீயோ இவரைப் பற்றி நபித்தோழர் என்று சான்றளித்திருக்க வேண்டும். அப்படி யாரும் சான்றளிக்கவில்லை. தத்ரீப் 2/672ல் நபித் தோழரைத் தீர்மானிப்பதற்குரிய இந்த அளவுகோல் கூறப்பட்டுள்ளது. நபித் தோழரைத் தீர்மானிப்பதற்குரிய இந்த அளவு கோலின் படி இவர் நபித்தோழர் என்பது நிரூபணமாகவில்லை. எனினும் சில நூற்களில் இவரை நபித்தோழர் என்று கூறியிருப்பது ஏன் என்பது புரியவில்லை."
இந்த நபிமொழி பலவீனமானது என்பதற்கான இவர்களின் மற்றொரு குற்றச்சாட்டு.
அப்துல்லாஹ் பின் முஆவியா ஒரு நபித்தோழரே.
யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அளவுகோலை கையில் எடுத்துக் கொண்டு ஒரு நபித்தோழரை, நபித்தோழர் அல்லர் என வாதிப்பது அறிவுடமையாகாது. மேலும், இவர்களே, 'நபித் தோழர் என சில நூற்களில் கூறியிருப்பது ஏன் என்பது புரியவில்லை' என ஆதங்கத்துடன் உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டதாக நினைப்பது போல, அறிவுக் கண்ணை மூடிக் கொண்டு, உண்மை புரியவில்லை என்று இவர்கள் கூறவதால், உண்மைப் பொய்யாகிவிடுமா? இவர்களுக்கு தெரியவில்லை என்பதால், யாருக்கும் தெரியாது என்று ஆகிவிடுமா?
அப்துல்லாஹ் பின் முஆவியா(ரலி) அவர்கள் ஒரு நபித்தோழர் என்றே பெரும்பாலான நூற்களில், அடை யாளங்காட்டப்பட்டுள்ளார் குறிப்பாக அவர்கள் மேற்கோள் காட்டிய நபித்தோழருக்கான அளவுகோலை விவரிக்கும் தத்ரீப் என்ற நூலிலும்கூட நபித் தோழர் அல்லர் என கூறப்படவே இல்லை.
அறிவிப்பாளர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்ட இவர்கள் மேற்கோள்காட்டும் எல்லா நூற்களிலும், நபித்தோழர் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளார்.
'நபித் தோழர்' எனக் கூறிய நூற்கள் பட்டியல் இதோ!
1. இல் இஸாபா.
2. தஹ்தீபுத் தஹ்தீப்.
3. தக்ரீபுத் தஹ்தீப்
4. மிஜானுல் இஃதிலால்.
5. அல் காஷிப்
6. தஹ்தீபுல் கமால்
7. முஃஜமுஸ் ஸஹாபா
8. அல் ஃபிர்தவ்ஸ் பிமஃதூரில் கிதாப்.
9. அல் ஜர்ஹ் வத்தஃதீல்.
10. அவ்னுல் மஃபூத்
11. அத்தபகாத்துல் குப்ரா.
12. அல் இஸ்திஆப்.
13. இமாம் புகாரி அவர்களின் தாரிக் அல் கபீர்.
இப்னு ஹிப்பான், அபூ ஹாதிம் அர்ராஜி ஆகியோரும் அப்துல்லாஹ் பின் முஆவியா (ரலி) அவர்கள் ஒரு நபித்தோழர்தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.
இமாம் புகாரி உட்பட ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவராலும் நபித் தோழர் எனக் கூறப்படும் ஒருவரை, தங்களது கருத்திற்கு எதிரான ஒரு செய்தியை அறிவிக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை நபித்தோழர் அல்லர் என்று சாதிக்கும் இவர்களின் மனநிலையை என்னவென்று கூறுவது.
இந்த ஒரு ஹதீஸைத்தவிர வேறு எதிலும் இடம் பெறவில்லை என்றொரு குற்றச் சாட்டையும் கூறுகிறார்கள். இதனை சரியென ஒப்புக் கொண்டால், ஒரு ஹதீஸைத் தவிர வேறு எதிலும் இடம் பெறாத நபித் தோழர்கள் என நீண்டதொரு பட்டியல் உண்டு. அவர்களையெல்லாம் நபித்தோழர்கள் அல்லர் என்று கூறுவார்களா? ஒரு ஹதீஸைக் கூட அறிவிக்காத பல நபித்தோழர்களும் உள்ளனர். அதனால், இவர்களை நபித்தோழர்கள் அல்லர் என்றுதான் கூற முடியுமா?
பரவலாக அறியப்படாதவரா?
அப்துல்லாஹ் பின் முஆவியா நபித்தோழர் என பரவலாக அறியப்படாதவர் என்ற வேறொரு குற்றச் சாட்டையும் கூறுகிறார்கள்.
1. அப்துல்லாஹ் பின் ஹர்மலா அல்முத்லஜி (عبد الله بن حرملة المدلجي)
2. ஷிஹாப் பின் அல் மஜ்னூன் (شهاب بن المجنون الجرمي)
3. கத்தாஷ் பின் அபீ கத்தாஷ் (خداش بن أبي خداش)
4. ரக்ப் அல் மஸ்ரியீ (ركب المصري)
5. ஷத்தாத் பின் ஷர்ஹபீல் (شداد بن شرحبيل)
6. ஷத்தாத் பின் ஃதுமாமா (شداد بن ثمامة)
7. அம்ர் பின் மஃதீகரிப் (عمرو بن معديكرب)
8. கைஸ் பின் அல் ஹாரிஸ் (قيس ين الحارث)
9. யஃகூப் பின் அல் ஹுஸைன் (يعقوب بن الحصين)
10. அபூ ஹிந்த் அல் பஜலி (أبو هند البجلي)
11. அல் ஹாரிஸ் பின் முகல்லத் அல் அன்ஸாரி (الحارث بن مخلد الأنصاري)
12. அப்துல்லாஹ் பின் மாயிஜ் அத் தமீமிய்யீ(عبد الله بن ماعز التميمي)
13. முஆவியா பின் முஆவியா அல் முஜ்னியீ (معاوية بن معاوية المزني)
ஆகியோர் நபித் தோழர்கள் எனக் கூறப்படுகின்றனர். ஆனால், நபித்தோழர்களில் அவர்கள் பிரபலமாகாதவர்கள் என்ற மறுப்புரையை அல் இஸாபா என்ற தனது நூலில் பதிவு செய்துள்ள இமாம் இப்னு ஹஜர் அவர்கள், 'அப்துல்லாஹ் பின் முஆவியா' ஒரு நபித் தோழர்தான் என அழுத்தமாக கூறியுள்ள தன் மூலம், இமாம் இப்னு ஹஜர் காலத்தில், நபித்தோழர்தான் என பரவலாக அறியப்பட்டுள்ளார் என்பது ஊர்ஜிதமாகிறது.
வட இந்தியாவில் உள்ள ஒருவர், சென்னையில் பிரபலமாக உள்ள ஒருவரை, 'பிரபலமாகாதவர்' என விமர்சனம் செய்தால் அது அவரின் அறியாமை. அதுபோல, 21வது நூற்றாண்டில் வாழ்ந்து வரும் ஒருவர், 14-ம் நூற்றாண்டிலும், அதன் பிறகும் பிரபலமாக இருந்து வந்த ஒரு நபித்தோழரை 'பிரபலமாகாதவர்' என்று விமர்சிப்பது மாபெரும் கேலிக் கூத்தாகும்.
ஹதீஸ்கலை அறிஞர்களால் இந்த விமர்சனம் கூறப்பட்டுள்ளதா? அல்லது சந்தேகம் என்றாவது கூறியுள்ளார்களா? என்றால் அவ்வாறு ஒருவரும் கூறவில்லை.
விலைபோகாத மூன்று குற்றச்சாட்டுகள்:
ஆக, அபூதாவூதின் அறிவிப்பின் மீது இவர்கள் சுமத்திய மூன்று குற்றச்சாட்டுகளும் நாம் அளித்த தெளிவான விளக்கத்தின் மூலம், ஒன்றன் பின் ஒன்றாக வேரறுந்து விழுந்து விட்டதால், இந்த ஹதீஸ் ஸஹீஹானதுதான் என்பது உறுதியாகிவிட்டது. எனவே, வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்பதற்கு இந்த நபி மொழி சரியான சான்றாக விளங்குகிறது என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.

<< Home