Friday, December 23, 2005

மகனின் சாதுரியம் (சிறுகதை)

விடியற்காலை பாங்கோசை கேட்டு கண் விழித்தார். விழித்தெழத் துணை புரிந்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார். மனித குலம் அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்ட ஃபஜ்ர் தொழுகையை அவரும் மன அமைதியோடு நிறைவேற்றினார். பின்பு பஸ் நிலையம் நோக்கி புறப்பட்டார்!

தனது மனைவி ஆயிஷாவிற்கு வாங்கிய புடவைக்காக ஜவுளிக் கடையில் கொடுத்த சிறிய துணிப் பை அவர் கையில். அதில் வறுமையையும், சோகங்களைப் பறைசாற்றும் சில கந்தலான மாற்றுத் துணிமனிகள். வாடிய முகம். முகத்தை அலங்கரிக்கும் தாடி. தளர்ந்த வயது. முகத்தில் மாட்டியிருந்த பழைய மூக்குக் கண்ணாடியை சரி செய்தவாறே சோர்வாக பேருந்தின் படியில் தட்டுத் தடுமாறி ஏறி இருக்கையைத் தேடிப்பிடித்து சோகங்ளைச் சுமந்து கொண்டு கனத்த இதயத்துடன் அமர்ந்தார் அப்துல் காதர்.

அப்துல் காதரையும், அவர் போன்ற சோகத்தில் வாடும் வேறு பலரையும் சுமந்து கொண்டுள்ள பேரூந்து, அவர்களது சோகத்தில் பங்கு கொண்டது போல முணுமுணுப்போடு புறப்பட்டது. பேரூந்தின் வேகத்தில் அப்துல் காதர் சிந்தனையும் புறப்பட்டு விட்டது. குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போன தனது மனைவி, உடல் நிலை குன்றி அவதிப்படுவதை காண சகிக்க முடியாமலும், அவளுக்கு சிகிச்சை செய்வதற்கு பண வசதி இல்லாமல் இருக்கும் தனது நிலையை நினைத்து நினைத்து நொந்து நூலாகிப் போன கனத்த இதயத்துடனும் பயணம் செய்யும் அப்துல் காதர், பட்டணத்தில் மனைவி, மக்கள், மாடி வீடு என சகல வசதிகளுடனும் வாழும் தான் பெற்ற அன்பு மகன் ஹனீபாவைக் காண புறப்பட்டு விட்டார்.

தனது மனைவியின் வைத்தியச் செலவிற்கு மகனிடம் ஏதேனும் உதவி பெற்று வரலாம் என்ற கற்பனையில் பேரூந்திலிருந்து இறங்கி வீட்டின் விலாசம் அறிந்து தள்ளாடி நடந்து சென்ற முதியவர் அப்துல் காதர் வீட்டின் கதவைத் தட்டுகிறார். உள்ளே தனது மகனிடம் 'ம் ஹும் ஒரு சல்லிக்காசு கொடுக்கக் கூடாது' என தனது மருமகள் கறாராய் கூறிக் கொண்டிருப்பதைக் கேட்டு மனம் உடைந்து போன அப்துல் காதர் திரும்பிப் போய் விடலாம் எனக் கருதி கண்ணீருடன் அடியெடுத்து வைத்து திரும்பிய போது கதவு திறக்கும் சப்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார்.

'தாத்தா! வந்திருக்காங்க! தாத்தா! வந்திருக்காங்க!' எனக் கூவியபடி, 'உள்ள வாங்க! தாத்தா! உள்ள வாங்க!' என உரக்கக் கூறியவாறே தள்ளாடித் திரும்பிய அப்துல் காதரின் கையை பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்று கம்பீரமான சுழற் நாற்காலியில் அமர வைத்தான் பேரன் அஹ்மது குட்டி. முறைத்துப் பார்க்கும் தனது தாயை திரும்பி பார்க்காமலேயே, 'ஏன் தாத்தா பாட்டியை அழைச்சிக்கிட்டு வரலையா? அவங்க சவுக்கியமா இருக்காங்களா? நீங்க சாப்பிட்டிங்களா?' என்று சோகம் புரியாமல் கேட்கும் தனது பேரனுக்கு என்ன பதில் கூறுவது என்ற யோசனையிலேயே அவனது தலையை பரிவோடு வருடிக் கொண்டிருந்த அப்துல் காதர், தனது மகன் வருவதைக் கண்டு எழுந்து விட்டார்.

தான் வந்திருக்கும் நோக்கத்தை ஏற்கனவே அறிந்து வைத்திருக்கும் மகனிடம், என்ன கூறுவது என்று தயங்கி நின்று கொண்டிருந்த தந்தையை இருக்கையில் அமரச் சொல்லி விட்டு, எதிரில் இருந்த நாற்காலியில் ஹனீஃபா பலத்த யோசனையோடு அமர்ந்து கொண்டான். ஒழிந்திருந்து கண்காணித்துக் கொண்டிருக்கும் மனைவியை ஓரக்கண்ணால் அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கும் மகனை நோக்கி 'சிரமத்தோடு பத்து மாதம் உன்னை வயிற்றில் சுமந்தவள், சிரமத்தோடு பெற்றெடுத்தவள், இரவு பகலாக உனக்காக கண் விழித்து, கண்ணை இமை காப்பது போல் உனக்கு காவலாக இருந்தவள் உன் தாய். அவள் நோய் வாய்ப்பட்டு அவதிப்படும் போது கூடவா உதவிட உனக்கு மனம் வரவில்லை' என கேட்டு விடலாமா? என உதடுகளை அசைத்த அப்துல் காதர் தனது இயலாமையை நினைத்து மௌனமாகி விட்டார்.

நெடுநேர அமைதியை அப்துல் காதரின் குரல் கலைத்தது. 'சரி மகனே! நான் புறப்படுகிறேன். உன் தாயின் வைத்தியச் செலவிற்கு எப்படியாவது நான் ஏற்பாடு செய்து கொள்கிறேன். உங்களுக்கு நல்லது தரட்டும் என வல்ல அல்லாஹ்விடம் வேண்டிக் கொள்கிறேன்' என்று கூறி விட்டு புறப்பட்டு விட்டார் அப்துல் காதர்.

'சரிங்க வாப்பா' என்று கூறிக் கொண்டு வாசற்படி வரை வந்த ஹனீஃபா, எதையோ சொல்ல மறந்துவிட்டது போன்று பாவனை செய்து கொண்டு வெளியில் வந்து 'வாப்பா! நீங்கள் நீண்ட நாட்களாக பழைய கண்ணாடியை மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே! இதோ ஒரு புதுக் கண்ணாடி வாங்கி வந்துள்ளேன். அடுத்த வாரம் ஊருக்கு வருவதாக அம்மாவிடம் சொல்லுங்க வாப்பா' என்றவாறே தன்னிடம் இருந்த கண்ணாடிக் கூட்டை அப்துல் காதரிடம் நீட்டினான்.

மனைவியின் மருத்துவச் செலவிற்கு பணம் தர மறுத்த மகனிடம் எப்படி இதனைப் பெற்றுக் கொள்வது என்று தயங்கிக் கொண்டிருந்த வாப்பாவின் கையில் திணித்து விட்டு உள்ளே சென்று விட்டான் ஹனீஃபா.

சுமந்து வந்த சோகத்துடன் திரும்பிச் செல்லும் அப்துல் காதர் பஸ் நிலையத்திற்கு வழிக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, அவரது பழைய கண்ணாடி கீழே விழுந்து நொருங்கி விட்டது.

பார்வைக் குறைவால் தட்டுத் தடுமாறிய அப்துல் காதர் தனது மகன் கொடுத்த கண்ணாடியை வேறு வழியின்றி அணிந்து கொள்ள நினைத்து அதனை திறந்த போது, கண்ணாடியுடன் ஆயிரம் ரூபாயின் 5 நோட்டுகள் இருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்து 'அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்' என்று உரக்கவே கூறிவிட்டார்.

தனது மருமகளின் அடாவடித்தனத்தையும், மகனின் சாதுரியத்தையும் கண்டு மீண்டும் ஒரு முறை அல்லாஹ்விற்கு நன்றி கூறி விட்டு, மருமகளுக்கு நல்ல புத்தி ஏற்பட இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்தனை செய்து, புறப்பட்டார் பஸ் நிலையம் நோக்கி.

மனைவியைப் பகைத்துக் கொள்ளாமலும், தக்க தருணத்தில் தாயாருக்கும் உதவிய தனது மகனின் சாதுர்யச் செயலைச் சிந்தித்தவாறே பேரூந்தில் பயணித்துக் கொண்டிருந்தார் அப்துல் காதர்.

அல்லாஹ் கூறுகின்றான்:

(وَوَصَّيْنَا الْأِنْسَانَ بِوَالِدَيْهِ
إِحْسَاناً حَمَلَتْهُ أُمُّهُ كُرْهاً وَوَضَعَتْهُ كُرْهاً وَحَمْلُهُ
وَفِصَالُهُ ثَلاثُونَ شَهْراً حَتَّى إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ
سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ
عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحاً تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي
ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ) (الاحقاف:15)

'தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய்
சிரமத்துடன் சுமந்தாள், சிரமத்துடனேயே ஈன்றெடுத்தாள். அவனை சுமந்ததும், பால் குடியை
மறந்ததும் 30 மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து, நாற்பது வயதையும் அடையும்
போது 'என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட் கொடைக்கு நன்றி
செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக!
எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.
நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுகிறேன்.' அல் குர்ஆன்: 46:15

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

5971-عَنْ أَبِى
هُرَيْرَةَ رضى الله عنه قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه
وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَحَقُّ بِحُسْنِ صَحَابَتِى قَالَ «
أُمُّكَ » . قَالَ ثُمَّ مَنْ قَالَ « أُمُّكَ » . قَالَ ثُمَّ مَنْ قَالَ «
أُمُّكَ » . قَالَ ثُمَّ مَنْ قَالَ « ثُمَّ أَبُوكَ »رواه البخاري

நபி
(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில்
உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று வினவினார். அதற்கு நபி (ஸல்)
அவர்கள் 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி (ஸல்)
அவர்கள் 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்? ' என்றார். 'உன் தாய்'
என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். 'பிறகு யார்? ' என்றார் அவர். அப்போது 'உன் தந்தை'
என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், நூல்:
புஹாரி.(5971)

நாம் சிறுவராக இருந்த போது நம்மை பொறுப்போடு வளர்த்து
ஆளாக்குவதில் பெற்றோர் இருவருக்கும் பெரிய அளவில் பங்கு உள்ளது. எனவே, அவர்கள் வயது
முதிர்ந்த நிலையில் இருந்து வரும் அவர்களை நாம் பராமரிப்பது மனிதாபிமான
அடிப்படையில் தார்மீகக் கடமையாகும். பெற்றோர்களில் மிக மிக அதிகளவு பரிவு காட்டப்
பட வேண்டியவர் தாய் என்பதை மேற் கூறிய இறைவசனமும், நபி மொழியும் உணர்த்திக்
கொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

மேற்கூறிய இறைவசனத்தில் 'தனது
பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு வலியுறுத்தினோம்.' என்று கூறிய இறைவன், 'அவனை அவனது
தாய் சிரமத்துடன் சுமந்தாள், சிரமத்துடனேயே ஈன்றெடுத்தாள். அவனை சுமந்ததும், பால்
குடியை மறந்ததும் 30 மாதங்கள்.' என்று கூறி 'தாய்மை' அடையும் பெண்ணுக்கு ஏற்படும்
சிரமங்களை பட்டியலிட்டுக் காட்டுகிறான். இவ்வாறு பட்டியலிட்டுக் காட்டிடுவதின்
மூலம் அதிகம் கருணையும், அன்பும் காட்டப்பட வேண்டியவள் தாய்தான் என்பதை நமக்கு
உணர்த்துகிறான்.

'அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?
' என்ற வினாவிற்கு பதில் அளித்த நபி (ஸல்) அவர்கள், 'தாய்தான்' மூன்று முறை
வெளிப்படையாகவே கூறி விட்டார்கள். நான்காவது முறையாகதான் 'உனது தந்தை' என்று பதில்
அளித்துள்ளார்கள்.

குழந்தை கருவுற்றது முதல், பெற்றெடுத்தப் பின்பும்
தந்தையை விட தாய்தான் அதிக சிரமங்களை தாங்கிக் கொள்கிறாள். சிரமத்துடன் சுமந்தாள்;
சிரமத்துடன் ஈன்றெடுத்தாள்; பிறகு பாலூட்டினாள். அத்தோடு அவளது சிரமம் முடிந்து
விடுவதில்லை. இரவு உறக்கதை தொலைத்து விட்டு, குழந்தைக்கு காவலாக இருந்தாள். 'பால்
குடிக்கும் எனது பிள்ளைக்கு இந்த உணவு ஒத்துக் கொள்ளாது' என்று கூறி அவளுக்கு மிக
விருப்பமான சுவைமிக்க உணவுகளையெல்லாம் ஒதுக்கி விடுகிறாள். இந்த சிரமங்களில்
எதிலும் கடுகளவு கூட ஒரு தந்தை பங்கெடுத்துக் கொள்வதில்லை. இதனாலேயே அன்பு
காட்டப்பட வேண்டியவர்களில் தந்தையை விட தாய்க்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மில் பலர் தந்தையோடு இணக்கமாக
நடந்து கொளளும் அதே வேளையில் தாயை வெறுத்து ஒதுக்கி விடுகிறார்கள். அதற்கு காரணம்,
'தன் மனைவியோடு தகராறு செய்வது சண்டைக்கு நிற்பது தாய்தான்' என்ற தவறான எண்ணம்தான்.
இவ்வுலகில் ஆயிரம் மனைவிகளை நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். ஒரு தாயை ஒருக்காலும்
மாற்றிக் கொள்ள முடியாது என்பதையும், மனைவியின் சாபத்தை விட ஒரு தாயின் சாபம் பல
மடங்கு வலிமை உள்ளது என்பதையும், மனைவியின் அன்பை விட தாயின் அன்பு பல வகையில்
வீரியம் உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோரை திருப்தி
படுத்துவதில்தான் இறைவனின் திருப்தி உள்ளது. பெற்றோர் இருவரை அல்லது இருவரில்
ஒருவரை வயது முதிர்ந்த நிலையில் பெற்றுக்கொண்டவன், சுவனம் செல்ல வில்லையென்றால்
அவன் நாசமாகட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளதை இங்கே கவனத்தில் கொண்டு
மனைவியின் மந்திரச் சொல்லுக்கு கட்டுப்படாமல் தாயை அணுசரித்து நடப்பதில் நாம்
அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

அன்புச் சகோதரர்களே! பெற்றோர் நலம்
பேணுவோம்! இறைவனின் பேரருள் பெற்று நிலையான சுகம் நிறைந்த சுவனம் சென்றடைவோம்!

வட்டி ஒரு கொடூரமானது

"வட்டி ஒரு கொடூரமானது" என்பதை கொடுப்போரும், வாங்குவோரும்தான் மற்றவர்களை விட மிகத் தெளிவாகவே அறிந்து வைத்துள்ளனர். எனினும் அதிலிருந்து அவர்களால் விட முடியாமல் தவித்து வருகிறார்கள்.

தனி மனிதனிடமட்டுமல்ல இந்நிலமை. மாறாக, உலக நாடுகள் அனைத்துமே இந்த வட்டியை மையமாக வைத்தே இயங்கி வருகின்றன. அதன் கொடூரம் புரிந்திருந்தும் அதிலிருந்து விடுபட வழி அறியாது விழி பிதுங்கி நிற்கின்றன. பணக்கார நாடுகள் சில, ஏழை நாடுகளை வட்டியின் பெயரால் சுரண்டிப் பிழைத்து வருகின்றன. வளர்ந்து(?) வரும் ஏழை நாடுகளோ வேறு வழியின்றி வட்டிக்கு வாங்கி, அதற்கான வட்டியைக்கட்ட மேலும் வட்டிக்கு வாங்கி .... என இவ்வாறே பின்னோக்கி செல்கின்றன.

உலகளவில் இயங்கி வரும் இன்றைய எல்லாத் தொழில் நிறுவனங்களும் இந்த வட்டியை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகின்றன.

இத்தொழிலில்(?) ஈடுபட்டுவரும் முனைவர்கள் கூறும் காரணங்கள்தான் வேடிக்கையானது. விரைவில் முன்னேற்றம் அடைய வட்டிக்கு வாங்குவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என வாதிடுகிறார்கள். அவரச்தேவைக்கு என வட்டிக்கடைகாரர்களைத் தவிர கடன் தருவதற்கு யார் முன் வருகிறார்கள்? என பலஹீனமான கேள்வி ஒன்றையும் எடுத்து வைக்கிறார்கள்.

நமது இந்திய நாடே ஒட்டு மொத்தமாக வட்டியில் மூழ்கி விடுமோ என்ற அபாய நிலைக்கு அது தள்ளப்பட்டிருக்கிறது. அந்தளவிற்கு கொடுப்போரிடமெல்லாம் கை நீட்டி கடனை வாங்கிக் குவித்திருக்கிறது. இந்திய நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக திகழும் பல டன் தங்கத்தையே அடகு வைத்து கடன் வாங்கிய கூத்தும் இந்தியாவில் நடந்ததை அறிவோம். வாங்கியவர்களின் தொப்பையை நிரப்பிக் கொள்ளப் பயன்பட்டதோ என்னவோ, பொதுமக்களுக்கு எந்தப் பயனும் அதனால் ஏற்படவில்லை.

இந்தியா வாங்கிக் குவித்துள்ள கடன் காரணத்தால், என்றாவது ஒரு நாள், உலக வங்கியானது தான் வழங்கிய கடனுக்காக இந்தியாவை கிரயமாக எழுதி வாங்கிவிட்டால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை. அந்தளவிற்கு அபரிமிதமாக உலக வங்கியிடமிருந்து கடன் வாங்கி உள்ளது. எழுதிக் கொடுப்பதற்கும் தயக்கம் காட்டாதவர்கள்தான் இந்தியாவை ஆட்சி செய்து வருகிறார்கள் என்பது ஒரு வேதனையான விஷயம்.

இந்தியனாகப் பிறக்கும் ஒவ்வொருவரும் தான் வாங்காத கடனில் ஒரு சுமையைச் சுமந்தே ஆக வேண்டும் என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. வட்டிக்கு வாங்கும் ஒவ்வொரு முறையும் நாடாளும் மன்னர்கள் கூறும் காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கும், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் எளியவர்களின் துயர் துடைத்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குத் தேவையான பொருளாதார வளர்ச்சியை - புரட்சியை ஏற்படுத்த நல்ல பல திட்டங்கள் வகுத்து செயல் படுத்துவதற்காகத்தான் இப்பணம் பயன்படுத்தப்படும் போன்ற போலியான காரணங்களையே கூறி வருகிறார்கள்.

அவர்கள் கூறுவது போன்று வட்டிக்கு வாங்கிய நாடுகள், வங்கிக் கடனில் சுய தொழில் செய்து வரும் தனி நபர்கள், அல்லது வட்டியை மூலதனமாக வைத்து தொழிற்சாலைகள் துவங்கிய முதலாளிகள் தங்களது எண்ணத்தில் - திட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்களா? அவர்களது தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்றே ஆய்வறிக்கைகள் நமக்கு தெளிவு படுத்துகின்றன.

துவங்கிய பல தொழிற்சாலைகள் தொடங்கிய அதே வேகத்திலேயே இழுத்து மூடப்பட்டு விட்டன என்பதையும், அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளிகள் ஒரு நேர சோத்துக்கு வழியின்றி தெருவில் இறங்கி போரடுவதையும் நாம் கண்டு வருகிறோம்.

காரணம் என்ன? வட்டிக்கு கடன் வாங்கி தொழில் துவங்கிய சில நாட்களிலேயே வட்டி கட்ட வேண்டிய நெருக்கடி தொழிலதிபர்களுக்கு ஏற்படுகிறது. அதனை கட்ட முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிலை ஏற்படும் போது, தொழிற்சாலையை இழுத்து மூட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார். இதுதான் நமது நாட்டில் அடிக்கடி நடந்து வரும் கேலிக் கூத்தான நிகழ்வு.

தமிழில் ஒரு வழக்குச் சொல் ஒன்று உண்டு.

"அட்டிகை செய்வதற்கு வட்டிக்கு வாங்கினேன். வட்டியை கட்ட முடியாமல், அட்டிகையை விற்று வட்டியைக் கட்டினேன்"

இதுதான் நமது இந்திய நாட்டின் நிலை! இந்தியக் குடி மக்களின் பெரும்பாலாரின் அவல நிலையும் இதுதான். மேற்கூறிய வழக்குச் சொல்லுக்கு விரிவுரையாக விளங்கும் சர்வசாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சியை எளிதில் புரிய வைப்பதற்காக இங்கே குறிப்பிடுகிறேன்.

"வீட்டு லோன்" கேள்விப்பட்டிருப்பீர்களே! இன்றெல்லாம் வீடு தேடி வந்து வீட்டு லோன் தருகிறார்கள். இதில் தனியார் நிறுவனங்கள்(?) பரபரப்பான விளம்பரங்களை செய்து, வாடிக்கையாளர்களை தனது மாய வலைக்குள் சிக்க வைக்க பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள். பரிசுகள் பல உண்டு என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் தாங்கிய விளம்பரங்கள் நகரங்களின் அடுக்கு மாடிக் கட்டிடச் சுவர்களை ஆக்கரமித்துள்ளன.

சொந்த வீடு பற்றிய கனவில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பரம ஏழைகளில் பலர் பளிச்சிடும் இந்த போலியான விளம்பரங்களில் விட்டில் பூச்சியாய் விழுந்து தங்களை மாய்த்து வருகிறார்கள்.

சிரமப்பட்டு பல தேவையான ஆதாரங்களைத் திரட்டி, வீடு கட்டுவதற்காக ஆயுள் காப்பீட்டு (L.I.C) நிறுவனத்தை அணுகி குறைந்த வட்டி விகித்தில் இடத்தின் பத்திரத்தை அடமானமாக வைத்து கடனைப் பெற்று விடுகிறார்கள். இதில் இஸ்லாமியர்கள் - ஈமான் குன்றியவர்கள் அதிகம் ஈடுபட்டிருப்பதை வேதனையோடு குறிப்பிடுகிறேன்.

வாங்கிய கடனைக் கொண்டு வீடு கட்டி முடிப்பதற்குள் வட்டித் தொகையை கட்ட வேண்டிய காலம் வந்து விடும். அதனை கட்ட முடியாமல், சிரமப்பட்டுக் கொண்டிருப்பவன், கட்டி முடிவடையாமல், அரை குறையாக இருக்கும் தனது வீட்டினை அடிமாட்டு விலைக்கு விற்று வட்டியைக் கட்ட வேண்டிய நிர்பந்த நிலைக்குத் தள்ளப்படுகிறான். (இது தேவைதானா? வாசகர்களே! இதை உங்களது சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.)

"ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்" என்பது போல, வட்டிக்கு வாங்குபவன் இருக்கும் வரை வட்டிக்கு கொடுப்பவன் ஏழைகளின் இரத்தை உறுஞ்சிக் கொண்டுதான் இருப்பான்.

இந்த வட்டியில்தான் எத்தனை விதங்கள்! எத்தனை ரகங்கள்! அப்பப்பா!!

வட்டி, வட்டிக்கு வட்டி, டவுள் வட்டி, மீட்டர் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி, ரன் வட்டி, கந்து வட்டி, தண்டல் வட்டி, தின வட்டி இது போன்ற எண்ணற்ற வட்டி ரகங்கள்!

இந்த அனைத்து ரக வட்டிகளும், ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக ஆய்வு செய்து கண்டு பிடிக்கப் பட்ட புதிய ரகங்களா? அதுதான் இல்லை. பட்டு வேட்டி கட்டிவிடலாம் என்ற கனவில் வட்டிக்கு கடன் வாங்கியவன், இறுதியில் அவன் கட்டியிருக்கும் கோவணத்தையே இழக்கச் செய்யும் வட்டி ரகங்கள்தான் இவைகள். ஆம்! இந்த ரக வட்டிகள் மக்களை ஓட்டாண்டியாக்கி வைக்கும் புது ரக கொடூர வட்டிகள்.

மனித சமூகத்தில் ஊடுறுவிய புற்று நோய்கள்தான் இந்த வட்டி ரகங்கள். இதனை அடியோடு வேரறுக்க வில்லையெனில், சமூகத்தையே அழித்து விடும் அபாயம் நிறைந்தது. எந்த சமூகத்தில் வட்டி தலைவிரித்தாடுகிறதோ, அவர்களின் மீது இறைவனின் சாபமும், தண்டனையும் இறங்குகிறது என்பதை பின்வரும் நபி மொழி எச்சரிக்கிறது:

"விபச்சாரமும்,வட்டியும் மலிந்து காணப்படும் சமுதாயம் தங்களை இறைவனின் தண்டனைக்கு இலக்காக்கிக் கொள்கிறார்கள்"என நபிகள் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: அபூ யஃலா.

ஒரு சமூகத்தில் வட்டி வாங்குவது, கொடுப்பது பரவலாக - பகிரங்கமாக நடந்து வரும் போது அது தடுத்து நிறுத்தப்பட வில்லையானால், ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் அல்லாஹ்வின் கோபமும், சாபமும் இறங்குவதோடு அவனது தண்டனையும் இறங்கும் என்பதை நாம் நடை முறையில் பார்த்து வருகிறோம்.

மழை இல்லை. பஞ்சம், வறட்சி, பசி, பட்டினி, குடிக்க தண்ணீர் இன்றி மனித இனமட்டுமல்ல, வாயில்லா ஜீவன்களான கால் நடைகளும் சேர்ந்து செத்து மடிந்து கொண்டிருக்கின்றன. நிலத்தில் விளைச்சல் இல்லை. சில பகுதிகளில் மழை பொழிவதால் அழிவும், நாசமும் ஏற்படுகிறது. நில அதிர்வுகள் அடிக்கடி நிகழ்ந்து பல உயிர்களைக் கொன்று குவிக்கின்றன. காலரா நோய் பரவி, கணக்கற்ற உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு எண்ணற்ற சோதனைகள் அடிக்கடி நிகழ்கின்றன.

எண்ணற்ற சோதனைகளும் வேதனைகளும் எதனால் ஏற்படுகிறது? "வட்டி என்பது ஒரு குற்றமல்ல, அது வியாபார உத்தி" என யூதர்கள் கருதி வந்தது போல் இஸ்லாமியர்களும் அவ்வாறே கருதி வட்டிக்கு கொடுப்பதையம் வாங்குவதையும் சர்வ சாதாரணமாக செய்து வருகிறார்கள்.

கள்ளுக் குடிப்பவன் வெளியே தலைகாட்ட வெட்கப்படுகிறான். விபச்சாரம் புரிந்தவன் நடமாட நாணம் அடைகிறான். வட்டிக்குக் கொடுப்பவனோ பள்ளிவாசலின் தலைவனாக பவனிவருகிறான். அந்தளவிற்கு மக்களுக்கு மத்தியில் சமூக அந்தஸ்தைத் தேடித் தரக் கூடியதாக இத்தொழில் மாறிவிட்டிருக்கிறது என்பதை வேதனையோடு இங்கே குறிப்பிடுகிறேன்.

"வட்டிக்கு கொடுப்பது, வாங்குவது எவ்வளவு பெரிய கொடூரமான பெரும் குற்றம் என்பதை இந்த இஸ்லாமியச் சமுதாயத்திற்கு சரியான முறையில் எடுத்துரைக்கப்படவில்லை என்பதே இதற்கான காரணம் என நான் உணர்கிறேன்.

பெரும் பாவம்:

அன்பான சொந்தங்களே! மற்ற பல குற்றங்களை விட மிகக் மிகக் கொடூரமானது வட்டிதான் என்பதைக் கீழ் காணும் குர்ஆன் வசனங்ளும், நபி மொழிகளும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன:

"வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து, வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை வந்தப்பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் (வட்டித் தொழில்) செய்வோர் நரகவாசிகள் ஆவர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல் குர்ஆன்: 2:275)

"நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!"

"அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்து விடுங்கள்" அல் குர்ஆன்: 2:278,279.

"வட்டியின் ஒரு நாணயத்தை (அது வட்டியின் பொருள்தான் என்பதை) அறிந்த நிலையில் ஒருவன் உண்பது, முப்பத்தி ஆறு முறை விபச்சாரம் புரிவதை விட கடுமையான குற்றமாகும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழளா (ரலி) அவர்கள், நூல்: அஹ்மது.

"வட்டியை உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதற்கு சாட்சியம் அளிக்கும் இருவர், கணக்கு எழுதுபவன் ஆகிய அனைவரையும் நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்" என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: இப்னு மாஜா.

வட்டியின் கொடூரத்தை விவரிக்கும் நபி மொழிகள் இன்னும் ஏராளம் உண்டு. படிப்பினை பெற நினைப்போருக்கு மேற் கூறியவைகளே போதுமானதாகும்.

1) 36 முறை விபச்சாரம் செய்வதை விடவும் கடுமையான குற்றமாக இந்த வட்டித் தொழில் செய்வது கருதப்படுகிறது. ஒரு முறை விபச்சாரம் செய்தால் அதற்கான தண்டனை என்ன என்பதை வாசகர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்! ஒருவன் 36 முறை விபச்சாரம் புரிந்தால் இறைவனிடம் என்ன தண்டனை கிடைக்குமோ அதனைவிட கொடூரமான தண்டனை வட்டித் தொழிலில் ஈடுபட்டு வருவோருக்கு உண்டு என்பதை அடுத்த நபி மொழி நமக்கு கூறுகிறது.

2) விபச்சாரம், திருட்டு, கொலை, கொள்ளை, வழிப் பறி போன்ற தவறுகள் செய்த குற்றவாளிகளை எச்சரிப்பதை விட, வட்டிக்கு கொடுத்து வாங்கும் குற்றவாளிகளை, "வட்டித் தொழிலை நிறுத்திக் கொள்ள வில்லையெனில், என்னோடு போர் புரியத் தாயாரகிக் கொள்ளுங்கள்" என மிகக் கடுமையாகவே எச்சரிக்கை செய்துள்ளான். இறைவனோடு போர் புரிவதற்கு யாருக்குத்தான் முடிவும்?

3) வட்டியை உண்பவன் இவ்வுலகில் தண்டிக்கப் படுவதோடு மறுமையிலும் அவன் பேயரைந்தவன் போன்று பைத்திய நிலையில் எழுப்பப்படுவான். இன்று வட்டித் தொழில் செய்து வருவோரில் பலர் தங்களது இவ்வுலக வாழ்வில் பல் வேறு துன்பங்கள் அனுபவித்து வருவதை நாம் நேரில் பார்த்து வருகிறோம். இதனைக் பார்த்தப் பிறகாவது நாம் படிப்பினைப் பெறவில்லையெனில் பெரும் நஷ்டத்திற்குரியவர் நம்மை விட வேறு யாரும் இருக்க முடியாது என்பது உறுதி.

வட்டி குட்டி போடுவது உண்மைதானா?

வட்டித் தொழில் புரிந்து வருபவர்கள் மிகக் குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தராக சமுதாயத்தில் காட்சி தருகிறார். சிறிய முதலீட்டில் "சிட் ஃபண்ட்" நிறுவனத்தைத் துவக்கிய சில மாதங்களிலேயே பெரிய பெரிய பல நிறுவனங்களுக்கு உரிமையாளராக மாறி விடுகிறார். இதனை காணும் அப்பாவி மக்கள் ஏமாற்றம் அடைந்து, வட்டி பல குட்டிகள் போடுவதாக கற்பனை செய்து அவர்களும் வட்டித் தொழிலை ஆரம்பித்து விடுகிறார்கள். இது ஒரு மாயத் தோற்றமே என்பதை ஆரம்பத்தில் புரிய தவறி விடுகிறார்கள்.

மெலிந்தவனுக்கு ஏற்படும் உடல் வீக்கத்தை சதை வளர்ந்து விட்டதாக தப்புக் கணக்குப் போட்டு சிகிச்சை பெறத் தவறினால், விரைவில் மரணம் ஏற்படுவது உறுதி. வட்டியினால் ஏற்படும் பணப் பெருக்கத்தை இலாபம் என கருதி, மென்மேலும் அத்தொழிலை விரிவுபடுத்த நினைப்பது, அவனது செல்வத்திற்கு அழிவை ஏற்படுத்துவது அதனை விட உறுதியானது.

ஓகோ என வெற்றி நடை போட்டு வந்த எத்தனையோ "சிட் ஃபண்ட்" நிறுவன முதலாளிகள் இன்று மாமியார் வீட்டில் மணியடிச்சால் சோறு சாப்பிடும் கூட்டத்தில் சேர்ந்து கம்பியை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். வேறு சிலரோ பிடி வாரண்டிற்கு பயந்து ஓடி ஒழிந்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் என்ன நடந்தது? வட்டி பல குட்டிகள் போட்டு பெருகிக் கொண்டுதானே இருந்தது? இலட்சம் பல இலட்சங்களாக மாறிக் கொண்டுதானே இருந்தது? திடீரென இவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டு, "சிட் ஃபண்ட்" மூட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? என்று பலருக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.

"வட்டியினால் பெருகும் செல்வம், அழிவிற்கே காரணமாக அமைகின்றது. நாம் அறியாத விதத்தில் அது அழிந்து கொண்டே வருகின்றது. அல்லாஹ் அதனை அருள்வளம் அற்றதாக ஆக்கி இறுதியில் அழித்தே விடுகிறான்" என்ற உண்மையை பலரும் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். நமது செல்வத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் அல்லாஹ், வட்டியை அருள் வளமற்றதாக ஆக்கி அழித்து விடுவதாக பின் வரும் வசனத்தில் கூறுகிறான்.

"அல்லாஹ் வட்டியை அழிக்கிறான்; தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்" (2:276)

"வட்டியினால் அதிகரிக்கும் செல்வம் உண்மையில் குறைந்து கொண்டே வருகிறது" என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறி உள்ளார்கள்.

"வட்டியினால் அதிகரிக்கும் ஒருவனது செல்வம், இறுதியில் குறைந்து (அழிந்தே) விடுகிறது" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூட்கள்: இப்னு மாஜா, ஹாகிம்.

வட்டியினால் ஏற்படும் ஆபத்தை அறிந்து கொண்ட நாம் அதிலிருந்து முற்றிலுமாக விலக வேண்டும். வட்டியின் வாடை இன்றி ஒருவன் வாழவே முடியாது என்ற மாயத் தோற்றம் ஏற்பட்டு விட்ட மோசமான காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இந்தக் காலம் குறித்துதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வருமாறு கூறியிருப்பார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

"(அதிகமானோர்) வட்டியை உண்ணக் கூடிய அல்லது அதனுடை புழுதியாவது படியக் கூடிய ஒரு காலம் மக்கள் மீது வரும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவப்பது அபூ ஹுரைர (ரலி) அவர்கள். (நஸாயீ)

இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்நபி மொழி நூற்று நூறு பொருந்தி வருவதை தெளிவாகவே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. வட்டியின் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது என்று முடிவு எடுத்து செயல் பட்டு வரும் பல சகோதரர்கள் ஏதேனும் ஒரு நெருக்கடியை சந்திக்கும் போது, இந்தத் தீமையில் போய் மாட்டிக் கொள்கிறார்கள்.

வட்டி வாங்கும் கொடுக்கும் மனித சமுதாயமே! சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ்வின் தண்டனைகளுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்! துன்பத்தில் துவண்டு கொண்டிருக்கும் நம் சகோதரர்களுக்கு அழகிய கடன் கொடுப்போம்! நம் தகுதியை விட கூடுதலாக ஏற்படும் தேவைகளை தவிர்ப்போம்! "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" எனும் முது மொழியை மனதிற் கொண்டு உள்ளதைக் கொண்டு போதுமாக்கும் மனப் பக்குவத்தை உண்டாக்குவோம்! அதுவே! இன்பத்தின் திறவு கோல் என உள்ளத்திற்கு கூறுவோம்!

வட்டியை ஒழிப்போம். வட்டி இல்லாத ஓர் உலகு படைப்போம். அல்லாஹ் அதற்கு துணைச் செய்யப் போதுமானவன்.

நன்றி: நேர்வழி மாத இதழ் (தாய்ப் நகர் வெளியீடு)

Wednesday, December 14, 2005

மறுப்பு வெளியிட நினைப்போருக்கு!

மறுப்பு வெளியிட நினைப்போரின் கவனத்திற்கு!

ஏகத்துவ மாத இதழான அல் ஜன்னத், ஜகாத் குறித்த சிறப்பு செய்திகளைத் தாங்கி கடந்த டிசம்பரில் வெளியானது. சிலர் சமீபகாலமாக வெளியிட்டு வரும் குழப்பமான செய்திகளைத் தோலுரித்துக் காட்டும் விதத்தில் தக்க சான்றுகளுடன் சரியான மறுப்பாக அமைந்திருந்தது. அல்ஹம்து லில்லாஹ். மறைக்கப்பட்ட பல உண்மைகள் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்தன.

இந்நிலையில் இந்த ஆய்வுக் கட்டுரைக்கான மறுப்பும், விளக்கமும் அளிக்கப்படும் என்று விளம்பரம் செய்து வரும் கொள்கைச் சகோதரர்களின் மேலான கவனத்திற்கு!

செல்வத்தைத் தூய்மைப் படுத்தக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான் (துஹ்ரத்தன் லில் அம்வால்) என்று இறைத்தூதர் கூறியதாக பல மேடைகளில் நீங்கள் முழங்கி வந்த நபிமொழி எந்த நூலில் பதிவாகி உள்ளது? அதைக் கவனத்தில் கொண்டு உங்களது மறுப்பில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவீர்களா?

அவ்வாறு வெளியிட்டால் நாம் ஏற்கனவே அறிவித்திருந்த பரிசான ரூபாய் இரண்டு இலட்சத்தை தரக் காத்திருக்கிறோம். அல்லது நீங்கள் கூறாத செய்தியை இட்டுக்கட்டி நாம் கூறிவருவதாக நிரூபித்தாலும் இரண்டு இலட்சம் பரிசு உண்டு. இவ்வாறு பரிசுகள் அறிவிக்கும் கலையையும் உங்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டோம் என்பதையும் அடக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத் என்ற தங்கள் வாதத்தை நிலை நிறுத்த குர்ஆன் மற்றும் நபி மொழிகளிலிருந்து சான்றுகள் தரும்படி கேட்டிருந்தோமே, இவர்களது செவிகளுக்கு அது எட்டவில்லையா?. இவர்கள் விட்டுள்ள ஊசிக் கதையும், மூஸா ஈசாவிற்கு பணம் கொடுத்தார் என்ற கதையும் நூலறுந்த பட்டம் போல மக்கள் மன்றத்தில் எடுபடாமலேயே போய்விட்டது.

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு ஹதீஸைக் காட்டினால் ஒரு இலட்சம் ரூபாய் தருவோம் என்று அறிவித்த இவர்கள், அந்த ஹதீஸை எடுத்துக் காட்டிய போது, தாம் அறிவித்த ஒரு இலட்சம் ரூபாயை எங்கே கேட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில்கூட இந்த ஹதீஸை ஏற்க மறுக்கிறார்களோ என்னவோ. ஆனால், நாம் அவர்கள் அறிவித்த ஒரு இலட்ச ரூபாயை கேட்க மாட்டோம் என்பதை உறுதியாகத் தெரியப்படுத்திக் கொள்கிறோம். மாறாக, உண்மையை ஒப்புக் கொண்டு, அதனை மக்கள் மன்றத்தில் வெளியிடவே விரும்புகிறோம். இவர்களும் இவர்களை முழுமையாக நம்பியுள்ள ஒன்றுமறியாத அப்பாவி மக்களும் தங்களது நிலைபாட்டை மாற்றிக் கொண்டு, சத்தியத்தின் பக்கம் திரும்ப வேண்டும் என்பதே நன்மையை நாடுவோர் அனைவரின் விருப்பமாகும். வழக்கம் போல் செய்திகளைத் திரித்து மக்களைத் திசை திருப்பும் திருவிளையாடலில் இம்முறையும்; இறங்க வேண்டாம் என இவர்களுக்கு அறிவுறுத்துகின்றோம்.

நபித் தோழர்கள் முதல் ஹதீஸ் துறையில் தலைசிறந்து விளங்கிய இன்றைய அறிஞர் அல்பானி வரை அனைவரும் தவறிழைத்துள்ளார்கள் என்று பட்டியலிட்டு எழுதியும், பிரச்சாரமும் செய்து வரும் இவர்கள், தாங்கள் மட்டும் தவறே செய்ய மாட்டோம் என்ற ரீதியில் நடந்து கொள்கிறார்கள். அதனால்தான் இவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் போதெல்லாம் அவ்வாறு சுட்டிக்காட்டுவோர் மீது சீறிப்பாய்கிறார்கள். அவதூறுகளை அள்ளி வீசி ஆனந்தம் அடைகிறார்கள். இது அவர்களின் கொள்கைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது.

தொழுகையில் அணிய வேண்டிய ஆடையின்; அளவில் இவர்களின் முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டிய போது எகிறிக் குதித்தார்கள். (இது குறித்து விரிவான ஆய்வுக் கட்டுரை இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவர உள்ளது. சான்றுகளை இருட்டடிப்புச் செய்து வெளியிட்ட இவர்களின் வாதத்தில் உள்ள முரண்பாட்டினை ஆராய்ந்து உண்மைகள் வெளியிடப்படும்.) ஜகாத் விவகாரத்தில் இவர்கள் இழைத்துள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டிய போதும் இவ்வாறே நடந்து கொண்டார்கள். தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது அதனை அடக்கத்தோடு ஏற்று, தங்களைத் திருத்திக் கொள்கின்ற மனப்பக்குவம் இவர்களுக்கு எப்போது வரப் போகிறதோ?

இறையச்சமுடையோருக்கான இறைவன் கூறும் இலக்கணத்தை இறுதியாக இவர்களுக்கு நினைவூட்டுகிறோம்.

"அவர்கள் மானக்கேடானவற்றை செய்தாலோ (பாவ காரியங்கள் செய்து) தங்களுக்கு தாங்களே அநீதமிழைத்துக் கொண்டாலோ (உடனே) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, தமது பாவங்களுக்கு மன்னிப்புக் கோருவார்கள். தாங்கள் செய்தவற்றில் (தவறு எனத்) தெரிந்து கொண்டே நிலைத்திருக்க மாட்டார்கள்." (அல் குர்ஆன்: 3:135)

அல்லாஹ் நம் அனைவருக்கும் உண்மையை புரிய வைத்து, அதனைச் செயல்படுத்தக் கூடியவர்களாகவும் ஆக்கி வைப்பானாக!

Saturday, December 03, 2005

அணியும் நகைகளுக்கு ஜகாத் உண்டா? -1

இப்பக்கத்தை எளிதாக அச்செடுக்க இங்கு சொடுக்கவும்.

தங்கம், வெள்ளி ஆகியவை நாணயங்களாகவோ, கட்டிகளாகவோ வியாபாரத்திற்காக உள்ள ஆபரணங்களாகவோ, உபயோகிக்கத் தடைசெய்யப்பட்ட ஆபரணங்களாகவோ, (ஆண்கள் அணியும் ஆபரணங்கள் உருவப்படம் பதிக்கப்பட்ட ஆபரணங்கள்) அல்லது பாத்திரங்களாகவோ இருந்தால் அவற்றுக்கு ஜகாத் வழங்கியே ஆக வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு அறவே இல்லை. ஆனால், பெண்கள் அணியும் நகைகளுக்கு ஜகாத் வழங்க வேண்டுமா? என்பதில் அன்றைய நபித்தோழர்கள் முதல் இன்றைய மார்க்க அறிஞர்கள் வரை அனைவரிடையேயும் பலத்த கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதில் பாமர மக்கள்தான் அதிகம் குழப்பம் அடைந்துள்ளனர். இக்கருத்து வேறுபாடு ஏற்படக் காரணம் ஆபரணங்களுக்கு ஜகாத் உண்டு அல்லது இல்லை எனக் கூற குர்ஆனிலும் நபி மொழியிலும் நேரடியான சரியான தெளிவான சான்றுகள் இல்லை என்று கருதப்பட்டதுதான்.

எனவே, குர்ஆன் மற்றும் நபி மொழியின் அடிப்படையில் எந்த கருத்து சரியானதாக இருக்க முடியும்? என்பதைத் தெளிவு படுத்திக் கொள்ளவே இச்சிறிய ஆய்வினை வாசகர்களாகிய உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். அல்லாஹ் உண்மையை அனைவருக்கும் தெளிவுபடுத்தி அதனை செயல்படுத்தக் கூடியவர்களாக நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக!

நகைக்கு ஜகாத் இல்லை என்போர் முன் வைக்கும் சான்றுகள்.
பெண்கள் அணியும் நகைகளுக்கு ஜகாத் இல்லை எனக் கூறும் சாரார் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.

(1)
عن عافية بن أيوب عن الليث بن سعد عن أبي الزبير عن جابر عن النبي - قال ليس في الحلي زكاة. (رواه البيهقي في المعرفة, وإبن القيم الجوزي في التحقيق)

"நகையில் ஜகாத் இல்லை" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) அவர்கள். நூல்: மஃரிஃபத்துஸ் ஸுனன் லில் பைஹகி, தஹ்கீக்.


(2)
عَنْ أَبِى هُرَيْرَةَ رضى الله عنه عَنِ النَّبِىِّ . قَالَ « لَيْسَ عَلَى الْمُسْلِمِ صَدَقَةٌ فِى عَبْدِهِ وَلاَ فَرَسِهِ » رواه البخاري

"தனது அடிமை, குதிரை ஆகியவற்றுக்கு தர்மம் (ஜகாத்) வழங்குவது ஒரு முஸ்லிமின் மீது கடமை இல்லை" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள். நூல்: புகாரி 1464.

தன் உபயோகத்திற்கு அவசியமான குதிரை, பணிவிடைக்குத் தேவையான அடிமை ஆகியவற்றுக்கு ஜகாத் இல்லை என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து அறிய முடிகிறது. இதன் அடிப்படையில் குடியிருக்கும் வீடு, உடுத்தும் ஆடைகள் ஆகியவை ஜகாத் இல்லை என்ற இனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அது போன்றுதான் பெண்கள் அணிந்து கொள்ளும் நகைகள் சொந்த உபயோகப் பொருளாகக் கருதப்பட்டு அதற்கும் ஜகாத் இல்லை என்று கூறப்படுகிறது.

(3) வளர்ச்சி அடையக் கூடிய அல்லது வளர்ச்சிக்கு காரணமாக உள்ள பொருட்களில்தான் ஜகாத் கடமையாகும். தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை ஆபரணங்களாக மாறியதால் வளர்ச்சிக்குரியது அல்லது வளர்ச்சிக்கு காரணமானது என்ற நிலையிலிருந்து மாறிவிட்டது. எனவே, அவற்றில் ஜகாத் கடமை இல்லை.

(4) "ஆயிஷா, அஸ்மா பின்தா அபீ பக்கர் (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் உமர், அனஸ் (ரலி) ஆகிய ஐந்து நபித் தோழர்கள் நகைகளுக்கு ஜகாத் இல்லை" என்று கூறுவதாக இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அறிவிக்கிறார்கள். (பைஹகி)

حدثني يحيى عن مالك عن عبد الرحمن بن القاسم عن أبيه أن عائشة زوج النبي صلى الله عليه وسلم كانت تلي بنات أخيها يتامى في حجرها لهن الحلي فلا تخرج من حليهن الزكاة مؤطأ مالك. كذا رواه البيهقي وإبن أبي شيبة.


"அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தன்னிடம் அனாதைகளாக வளர்ந்து வந்த தனது சகோதரரின் பெண் மக்களுக்குச் சொந்தமான நகைகளுக்கு ஜகாத் வழங்க வில்லை." அறிவிப்பாளர்: காசிம் பின் முஹம்மது. நூல்: முஅத்தா, பைஹகி, இப்னு அபீ ஷைபா.

وحدثني عن مالك عن نافع أن عبد الله بن عمر كان يحلى بناته وجواريه الذهب ثم لا يخرج من حليهن الزكاة

"அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தன் பெண்மக்களுக்கும், அடிமைப்பெண்களுக்கும் நகை அணிவித்திருந்தார்கள். அவற்றிற்கு அவர்கள் ஜகாத் வழங்கவில்லை." அறிவிப்பாளர்: நாஃபிஉ. நூல்: முஅத்தா.

பலவீனமான நபி மொழி:

நகைக்கு ஜகாத் இல்லை என்போர் மேற்கண்டவற்றை தங்களின் கூற்றுக்கு சான்றுகளாக கூறுகின்றனர். இவர்கள் எடுத்து வைக்கும் இச்சான்றுகளை சற்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

முதல் சான்றான ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபி மொழியில் நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று முடிவுக்கு எளிதாக வரலாம். ஆனால், இந்த செய்தியைத் தனது நூலில் பதிவு செய்துள்ள இமாம் பைஹகி அவர்கள்,

(قال البيهقي: وما يروى عن عافية بن أيوب عن الليث عن أبي الزبير عن جابر مرفوعاً: ليس في الحلي زكاة فباطل لا أصل له, وإنما يروى عن جابر من قوله. وعافية بن أيوب مجهول, فمن إحتج به مرفوعاً كان مغرّراً بدينه.... معرفة السنن والأثار للإمام البيهقي)

"இந்த ஹதீஸ் அடிப்படையற்ற தவறான செய்தியாகும். ஜாபிர் கூறியதாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. (இறைத்தூதர் கூறியதாக அறிவிப்பது அடிப்படையற்றது.) மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஆஃபியத் பின் அய்யூப் நிலை அறியப்படாதவர். இவரின் அறிவிப்பை ஆதாரமாகக் கருதுவோர் இவரின் வணக்க வழிபாடு கண்டு ஏமாற்றம் அடைந்து விட்டனர்...." என்று குறிப்பு எழுதியுள்ளார்கள்.

"ஆஃபியத் பின் அய்யூப் என்பவர் பரவாயில்லாதவர் என்ற நிலையில் உள்ளவர்" என்று அபூ ஜுர்ஆ அவர்கள் கூறியதாக அல் ஜர்ஹ் வத் தஃதீல் என்று நூலில் (7/59) பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னுல் ஜவ்ஜி, "ஆஃபியத் பின் அய்யூப் என்பவரை யாரும் குறை கூறியதாக நாம் அறியவில்லை" என்றும் "ஆஃபியத் பின் அய்யூப் பலவீனமானவர் எனக் கருத அவர் பற்றிய எந்தக் குறையும் நமக்கு கிடைக்க வில்லை" என இமாம் முன்திரி ஆகியோர் ஆஃபியத் பின் அய்யூப் குறித்து நற்சான்று அளித்துள்ளனர்.

ஆனால், ஒர் அறிவிப்பாளரை ஆதாரமாக ஏற்க வேண்டுமெனில் வணக்க வழிபாடுகளில் சிறந்து விளங்கினால் மட்டும் போதாது. மாறாக நல்ல நினைவாற்றல் உள்ளவர், மறதி இல்லாதவர், பொய் உரைக்காதவர், நேர்மையானவர் போன்ற நம்பகமான அறிவிப்பாளர்களுக்கு உரிய அவசியமான பண்புகள் அவரிடம் இருக்க வேண்டும். இந்த அடிப்படை விதியின்படி, ஆஃபியத் பின் அய்யூப் என்பவர் அறிவிக்கும் செய்திகளை ஆதாரமாகக் கருதுவோர், நம்பகமான அறிவிப்பாளருக்கு இருக்க வேண்டிய இந்த அடிப்படைத் தகுதி இவரிடம் இருந்தது என்ற நற்சான்றினை முதலில் ஆதாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காத வரை இப்பண்புகள் உள்ளதாக அறியப்படாத ஒருவரின் அறிவிப்பை ஆதாரமாக ஏற்க இயலாது. குறிப்பாக வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸிற்கு எதிராக இவர் அறிவிப்பதை ஆதாரமாக ஏற்க முடியாது.

"அவரிடம் ஒரு குறையும் அறியப்படவில்லை" என்ற இப்னுல் ஜவ்ஜியின் கூற்றும், "ஆஃபியத் என்பவரை பலவீனப்படுத்தும் ஒரு குறையும் எனக்கு கிடைக்கவில்லை" என்ற முன்திரி அவர்களின் கூற்றும் ஆஃபியத்திற்கான நற்சான்றாக அமையாது. ஏனெனில், அவரது நிலை என்னவென்று யாராலும் அறிந்து கொள்ளப்படவில்லை என்பதனால்தான் அவர் குறித்து நல்லவர் அல்லது கெட்டவர் என்ற ஒரு செய்தியும் பதிவு செய்யப்படவில்லை. "பராவாயில்லாதவர் என்ற நிலையில் உள்ளவர்" என அபூ ஜுர்ஆ அவர்கள் கூறியதுகூட, ஆஃபியத் என்பாரின் வணக்க வழிபாடுகளை மட்டும் பார்த்து விட்டுதான் என்பது பைஹகியின் கூற்றிலிருந்து தெளிவாகிறது.

ஹதீஸ் கலையின் தலை சிறந்த அறிஞரும், அறிவிப்பாளர்கள் நிலை குறித்து ஆய்வு செய்தவருமான இமாம் பைஹகி அவர்கள் "ஆஃபித் என்பார் நிலை அறியப்படாதவர்" என்று கூறியுள்ள நிலையில், இவரின் அறிவிப்பை ஆதாரமாகக் கருதுவோர், அவரின் நமபகத்தன்மையை - நேர்மையை நிரூபிக்க வேண்டும்.

எனவே, நிலை அறியப்படாத ஒர் அறிவிப்பாளர் இந்நபி மொழியில் இடம் பெற்றுள்ளதால் இது பலவீனமடைகிறது. எனவே நகைகளுக்கு ஜகாத் இல்லை என்ற வாதத்திற்கு இதனைச் சான்றாக கருத முடியாது.

ஒரு வாதத்திற்காக இந்நபி மொழி ஸஹீஹானதுதான் என ஏற்றுக் கொண்டாலும்கூட இந்நபி மொழியின் முழுக் கருத்தையுமே இதனை சான்றாக கூறுபவர்களே ஏற்கவில்லை என்பதை இவர்களின் கூற்றிலிருந்தே அறியலாம். ஏனெனில், "நகை" என்ற வார்த்தை தங்கத்திலான வெள்ளியிலான பெண்கள் அணியும் நகை, ஆண்கள் அணியும் நகை என அனைத்தையும் குறிக்கும் பொதுவான சொல். இந்த ஹதீஸின் அடிப்படையில் நகைக்கு ஜகாத் இல்லை என்றால் ஆண்கள் அணியும் நகையிலும் ஜகாத் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால், அவ்வாறு இவர்கள் கூறவில்லை. மாறாக ஆண்கள் அணியும் நகைகளுக்கு (ஆண்கள் தங்க நகை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளி மோதிரம் அணியத் தடையில்லை) மட்டும் ஜகாத் உண்டு என்று இந்த ஹதீஸிற்கு மாற்றமாகவே கூறிவருகிறார்கள். எனவே இந்த ஹதீஸ் இவர்களாலேயே புறக்கணிக்கப் பட்டுவிட்டது என்றால் இதை எப்படி ஆதாரமாக ஏற்க முடியும் என்பதே நமது கேள்வி.

தவறான ஒப்பீடு:

இரண்டாவது சான்றான "அடிமை, குதிரை ஆகியவற்றுக்கு ஜகாத் இல்லை" என்ற நபி மொழி ஆதாரப்பூர்வமானதுதான். எனினும், இந்த ஹதீஸின் அடிப்படையில் நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று கூற முடியாது. ஏனெனில் குதிரை, அடிமை ஆகியவை அடிப்படையில் ஜகாத் வழங்க வேண்டிய இனத்தைச் சார்ந்ததல்ல. மாறாக வியாபாரத்திற்கு என்று ஆகும்போதுதான் அவை வியாபாரப் பொருளாகக் கருதப்பட்டு அவற்றின் மீது ஜகாத் கடமையாகிறது. வியாபார நோக்கமில்லாமல் ஒருவன் எவ்வளவு குதிரை வைத்திருந்தாலும் அடிமை வைத்திருந்தாலும் அதற்கு அவன் ஜகாத் வழங்க வேண்டும் என்று யாரும் கூறுவதில்லை. அது போன்றுதான் குடியிருக்கும் வீடும் உபயோகித்து வரும் ஆடைகளும் அடிப்படையில் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்ட இனத்தைச் சார்ந்தவை அல்ல.

மாறாக நகை என்பது அடிப்படையில் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி இனத்தைச் சார்ந்ததாகும். இந்நிலையில் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்ட இனத்தைச் சார்ந்த ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு மட்டும் (நகைக்கு) விதி விலக்கு அளிக்க வேண்டும் எனில் அதற்கு சரியான சான்றுகள் கூற வேண்டும். அவ்வாறு விலக்கு அளிக்க ஆதாரப்பூர்வமான எந்த ஒரு சான்றும் இருப்பதாக தெரியவில்லை. எனவே, இரண்டாவது நபி மொழியையும் ஆதாரமாகக் கொண்டு நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று கூற முடியாது.

முரண்பாடுகள்:

"வளர்ச்சி அடையக்கூடிய அல்லது வளர்ச்சிக்குக் காரணமான பொருளில்தான் ஜகாத் கடமை. நகை இந்நிலையிலிருந்து மாறிவிட்டதால் ஜகாத் வழங்க வேண்டும் என்ற சட்டமும் மாறிவிட்டது" என்ற அவர்கள் கூறும் மூன்றாவது சான்றும் முரண்பாடுகள் நிறைந்த தவறான சான்றாகும். ஏனெனில் நகை வளர்ச்சிக்கு காரணமாக இல்லை என்று கூறுவது பொருத்தமற்ற வாதமாகும். தங்க நாணயங்கள் வழக்கில் இருந்த காலத்தில் எவ்வாறு அதனை வளர்ச்சிக்குரியதாக பயன்படுத்த முடிந்ததோ அதே போன்று இன்று நகைகளும் வளர்ச்சிக்குரியதாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சில நாடுகளில் நகைகளை வாடகைக்கு கொடுத்து அதன் மூலம் வருமானமும் பெறப்படுகிறது. (நபித் தோழர்கள் காலத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நகைகள் இரவலாகக் கொடுக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் அவை வாடகைக்கு கொடுக்கபடுவது நடை முறைக்கு வந்தது. இந்நடைமுறை இப்போதும் சில நாடுகளில் வழக்கில் உள்ளது.) இதன் அடிப்படையில் நகை வளர்ச்சிக்குரியதாக உள்ளதால் அதில் ஜகாத் வழங்க வேண்டும் என்றுதான் கூற வேண்டும். நகை வளர்ச்சிக்கு காரணமானதல்ல எனக் கருதி அவற்றிற்கு ஜகாத் இல்லை என்று கூறுவது அடிப்படையற்ற எந்த ஆதாரமும் இல்லாத கூற்றாகும்.

மேலும் நகைகள் வளர்ச்சிக்குக் காரணமானதல்ல என ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் கூட, வேறு பல சந்தேகங்களுக்கும் அது வழி வகுக்கிறது. அதாவது, உபயோகப்படுத்தாமல் கட்டியாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தங்கத்திலும், வெள்ளியிலும் வளர்ச்சி ஏற்படுவதில்லைதான். மேற்கண்ட காரணத்தின் அடிப்படையில் இவற்றிற்கும் ஜகாத் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் அவ்வாறு யாரும் கூறுவதில்லையே ஏன்? அதே போன்று ஆண்கள் அணியும் நகைகள், தங்க வெள்ளிப் பாத்திரங்கள் (தங்கம் வெள்ளிப் பாத்திரங்கள் உபயோகிக்கத்தான் தடை தவிர, வைத்திருப்பதற்கு அல்ல.) இன்றைய நவீன காலத்தில் விளையாட்டு வீரர்கள் பெறும் விருதுகளான தங்கம் மற்றும் வெள்ளிக் கோப்பைகள், பதக்கங்கள் ஆகியவையும் வளர்ச்சிக்கு காரணமானதில்லைதான். இவற்றிலும் ஜகாத் இல்லை என்றே கூற வேண்டும். ஆனால், இவற்றிற்கு மட்டும் ஜகாத் உண்டு என இவர்கள் கூறிவருகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு?

மாற்றுக் கருத்துடைய நபித் தோழர்கள்:

அன்னை ஆயிஷா, அஸ்மா பின்தா அபி பக்கர், ஜாபிர் பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் உமர், அனஸ் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகிய ஐந்து நபித் தோழர்களும் நகைக்கு ஜகாத் இல்லை எனக் கூறியுள்ளனர் என்பதையும் ஆதாரமாக ஏற்க இயலாது. ஏனெனில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் போன்ற வேறுசில நபித் தோழர்கள் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இவ்வாறு நபித் தோழர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் போது ஒரு சாராரின் கூற்றை ஏற்றுக் கொண்டு மற்றொரு சாராரின் கூற்றை புறக்கணித்தால் அதற்கான சரியான காரணம் கூற வேண்டும். ஏற்கத்தக்க எந்தக் காரணமும் நிச்சயமாக அவர்களால் கூற இயலாது.

மேலும் நகைளுக்கு ஜகாத் இல்லை என இப்னு அப்பாஸ், அனஸ் (ரலி) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்பட்ட செய்தியும் உறுதியானதல்ல. காரணம் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நகைக்கு ஜகாத் உண்டு என்று கூறுவதாக இமாம் முன்திரி அவர்கள் தர்கீப் வதர்ஹீப் என்ற தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

அனஸ் (ரலி) அவர்கள் ஒரு முறை ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறியதாக "அல் முஹல்லா", பைஹகி போன்ற பல்வேறு நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முரண்பட்ட இரு கருத்துகள் இவ்விரு நபித்தோழர்கள் குறித்துக் கூறப்படுவதால்தான் இமாம் ஷாஃபி அவர்களும் அச்செய்தியில் சந்தேகம் அடைந்து, பின் வருமாறு கூறியுள்ளார்கள்.

قال الشافعي: ويروى عن ابن عباس وأنس بن مالك ولا أدري أثبت عنهما معنى قول هؤلاء ليس في الحلي زكاة (الأم)

"அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் ஜகாத் இல்லை என்று கூறுவதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால், அது உறுதியானதுதானா?" என்று நான் அறியேன் என கூறி உள்ளார்கள். (அல் உம்.)

நகைக்கு ஜகாத் இல்லை என்ற கூற வலுவான சான்றுகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால்தான், இராக்கில் இருந்த ஆரம்ப காலகட்டத்தில் நகைக்கு ஜகாத் இல்லை என்று கூறி வந்த இமாம் ஷாஃபி அவர்கள் எகிப்து வந்த பின் அவ்வாறு கூறுவதை நிறுத்திக் கொண்டு,

قال الشافعي وقد قيل في الحلى صدقة وهذا ما أستخير الله عز وجل فيه (الأم)

"நகையில் ஜகாத் உண்டு என்று கூறப்படுகிறது. நான் இது விஷயத்தில் நல்ல தீர்வை தரவேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்." என்று கூறினார்கள். (அல் உம், தர்கீப் வ தர்ஹீப்)

ஆரம்ப காலத்தில் ஜகாத் இல்லை என்று கூறிக் கொண்டிருந்த இமாம் ஷாஃபி அவர்கள் இறுதியில் அக்கருத்தை மாற்றிக் கொண்டார்கள் என்பதை "அல் உம்" என்ற அவரது நூலில் பல இடங்களில் வெளிப்படுத்தி உள்ளார்கள். நகைக்கு ஜகாத் இல்லை என்று கூற வலுவான சான்று இல்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே ஷாஃபி மத்ஹபை பின்பற்றுவதாக கருதுபவர்கள் இதனை கவனத்தில் கொண்டு நகைக்கு ஜகாத் வழங்க முன்வரவேண்டும். ஷாஃபி மத்ஹபின்படி நகைக்கு ஜகாத் இல்லை என்று கருதி ஜகாத் வழங்காமல் இமாம் ஷாஃபி அவர்களின் மீது பழியைப் போட்டுவிட்டு (மறுமையில்) தப்பித்து விடலாம் என்று கருத வேண்டாம். மறுமை நாளில் யாரும் யாரின் மீதும் பழி சுமத்தி விட்டு இறைவனிடமிருந்து தப்பி விட முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

"இறைவனிடம் இஸ்திகார செய்து பிரார்த்தித்தப் பின் நகைக்கு ஜகாத் இல்லை என இமாம் ஷாஃபி அவர்கள் கூறியதாக அவரது மாணவர் ரபீஃ பின் சுலைமான் அவர்கள் "உம்" என்ற நூலில் பதிவு செய்துள்ளார். இந்த செய்தி சரி என ஏற்றுக் கொண்டாலும், இமாம் ஷாஃபி அவர்களின் இந்தத் தீர்வு ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஏதேனும் ஆதாரம் கிடைத்திருக்குமேயானால், அதனைக் கூறியிருப்பார்கள். மேலும், இறைவனிடம் இஸ்திகார செய்து விட்டு கூறப்படும் செய்திகளை சான்றாக ஏற்க முனைந்தால், "ஒவ்வொருவரும் நான் இஸ்திகார செய்தேன். இதுவே தீர்வு" என்று கூறிக் கொண்டு பல்வேறு புதிய சட்டங்களைக் கூற முனைவார்கள். அப்போதும் அதனை மறுக்க இயலாது.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சொல்லும், செயலும்:

தன்னிடம் வளர்ந்த அனாதைகளின் நகைகளுக்கு ஜகாத் வழங்க வில்லை என்று அன்னை ஆயிஷா அவர்கள் குறித்து கூறப்பட்டுள்ளது போன்றே, அவர்கள் நகைகளுக்கு ஜகாத் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

حدثنا محمد بن إسماعيل (بن إسحاق) الفارسي ثنا يحيى بن (جعفر بن الزبرقان) أبي طالب ثنا عبد الوهاب (بن عطاء الخفاف) أنا الحسين (بن ذكوان) المعلم عن عمرو بن شعيب عن عروة عن عائشة قالت لا بأس بلبس الحلي إذا أعطي زكاته رواه الدارقطني والبيهقي.

"நகைகளுக்கு ஜகாத் வழங்கி விட்டால் அதனை அணிந்து கொள்வதில் குற்றமில்லை" என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உர்வத் பின் ஜுபைர், நூல்: தாரகுத்ணி, பைஹகி.

இதன் அறிவிப்பாளர்களில் சிலர் குறித்து குறை கூறப்பட்டிருந்தாலும், அக்குறை, இந்த செய்தியை புறக்கணிக்கின்ற அளவுக்கு இல்லை. ஏனெனில் குறை கூறப்பட்டவர்கள் புஹாரி, முஸ்லிம் உட்பட ஸிஹாஹு ஸித்தா எனப்படும் ஆறு நூற்களில் இடம் பெற்றவர்கள். எனவே இச்செய்தி ஏற்கத்தக்கதே.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து இவ்வாறு முரணான இரு வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. இவ்விரு செய்தியும் ஆதாரப்பூர்வமானதுதான் என்பதிலும் சந்தேகமில்லை. இவ்வாறு ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து இருவிதமாக அறிவிக்கப்படுவதால் ஜகாத் வழங்கவில்லை என்ற செய்தியை மட்டும் ஆதாரமாக எடுத்துக் கொள்வது என்ன நியாயம்?

மேலும் ஒருவரின் கூற்று அவரது செயலுக்கு முரண்பாடாக இருக்குமேயானால் செயலைவிட அவர் கூற்றுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற ஹதீஸ் கலையின் அடிப்படை விதியின் படியும், ஜகாத் உண்டு என்ற அன்னை ஆயிஷாவின் கூற்று குர்ஆன், மற்றும் வேறு நபி மொழிகளுக்கு ஒத்து இருப்பதாலும் அவர்களின் செயலைவிட அவர்களின் கூற்றையே முற்படுத்த வேண்டும். எனவே, ஜகாத் வழங்க வில்லை என்ற அவர்களது செயலை ஆதாரமாகக் கருதுவது கூடாது.

நகையின் அளவினைத் தீர்மானிப்பதிலும் குழப்பம்:

நகைக்கு ஜகாத் இல்லை என்போர் வேறொரு குழப்பத்திலும் உள்ளனர். அதாவது, நகைக்கு ஜகாத் இல்லை என்றால் எவ்வளவு இருந்தாலும் ஜகாத் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால், அதிகமாக நகை வைத்திருப்போர் மட்டும் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். அந்த "அதிக அளவு" எவ்வளவு என்பதை அவர்களால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. அதே சமயத்தில் எவ்வளவு இருந்தாலும் ஜகாத் இல்லை என்றும் அவர்களால் கூற இயலவில்லை. அவ்வாறு கூறினால் ஏமாற்ற நினைப்போருக்கு அது சாதமாக அமைந்து விடும்.

எனவே நகைகளுக்கு ஜகாத் இல்லை என்றால், அதிகமான நகை வைத்திருப்போர் மட்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று பொதுவாகக் கூறுவது எந்த விதத்தில் நியாயமாகும்? அவ்வாறு கூறுவதற்கு என்ன சான்று? மேலும், "இது அதிகமானது", "இது குறைவானது" என்று எதனை அளவுகோலாகக் கொண்டு தீர்மானிப்பது? அனைவருக்கும் பொருந்தி வரக்கூடிய பொதுவான அளவினை கூறமுடியாது போய் இறுதியில் வேறொரு சட்டச்சிக்கலுக்குத்தான் இது வழி வகுக்கும்.

அணியும் நகைகள் எனும் போது, அணிந்திருக்க வேண்டிய கால அளவு எவ்வளவு என்பதை ஜகாத் இல்லை என்போரால் தெளிவு படுத்தப்படாமல் அவற்றிலும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அதாவது, ஜகாத் இல்லை என்பது எப்போதும் அணிந்து கொண்டிருக்கும் நகைகளுக்கு மட்டுமா? அல்லது எப்போதாவது ஒரு முறை அணிந