மரியாதைக்குரிய T.N.T.J. விவாதக்குழுவிற்கு
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விவாதக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மரியாதைக்குரிய சகோதரர் மவ்லவி அப்துன்னாஸிர் அவர்களின் மேலான கவனத்திற்கு நூர் முஹம்மது எழுதிக் கொள்வது. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). பூரண ஈமானுடனும், முழு உடல் ஆரோக்கியத்துடனும் இம்மடல் உங்களை சந்திக்கட்டும்.
T.N.T.J-யின் தாயிஃப் கிளைத் தலைவர் சகோதரர் அப்பாஸ் அவர்கள், கடந்த 10-02-2006 வெள்ளிக் கிழமை அன்று நான் பொறுப்பாளராக உள்ள அல்சலாமா இஸ்லாமிய நிலையத்தில் (தாயிஃப், சவூதி அரபியா) ஜும்ஆ தொழுது முடிந்ததும் தொழுகையில் கலந்து கொண்ட அனைவரது முன்னிலையிலும் தன்னிச்சையாக எழுந்து ஒரு பேப்பரைக் காட்டி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து மவ்லவி நூர் முஹம்மது அவர்களுக்கு ஒரு கடிதம் என் மூலம் வந்துள்ளது. அதனை அவர் பகிரங்கமாக வாசித்துக் காட்டுவார் என்று எவ்வித முன் அனுமதியும் பெறாமல் அவரே அறிவிப்பும் செய்தார்.
நிலையத்தின் தமிழ் பிரிவின் பொறுப்பாளர் என்ற முறையில் என்னிடம் எந்த ஒரு முன் அனுமதியும் பெறாமலேயே, தன்னிச்சையாக ஒருவர் ஓர் அறிவிப்புச் செய்வது அநாகரீகமானது என்பதை இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.
04-02-06 தேதியிட்டு அன்றே அனுப்பப்பட்டதாகக் ஃபேக்ஸில் காண முடிகிறது. 4-ந்தேதி பெறப்பட்ட ஃபேக்ஸ் 10-02-06 தேதி வரை மறைக்கப்பட்டு தொழுகை நடப்பதற்கு முன்பு கூட என்னிடம் இதைத் தெரிவிக்காமல் இவ்வாறு நடந்து கொண்டதன் மர்மம் என்ன? இவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதா?
எனக்கு ஃபேக்ஸ் மற்றும் மின்னஞ்சல் வசதி இருந்தும், நேரடியாக இது போன்ற எந்தக் கடிதமும் எனக்கு வரவில்லை. இப்படி ஒரு கடிதம் உங்களிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் எனக்கு நேரடியான எந்தத் தகவலுமில்லை.
ஜகாத் விஷயத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாட்டுக்கு எதிராக நான் பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டு, நான் தாயகம் வரும் போது நட்பு முறையிலான பகிரங்க விவாதம் நடத்திட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
(ஒர் ஆண் தன் தொடையின் பெரும் பகுதி திறந்த நிலையில் டவுசர் அணிந்து கொண்டு தொழுதால் அவனைக் குறைகூற முடியாது என்று குர்ஆன், சுன்னாவிற்கு மாற்றமாக நீங்கள் வெளியிட்டிருந்த கருத்தையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகிறேன். இது குறித்த என் ஆய்வுக் கட்டுரையை இணைய தளத்தில் பல வாரங்களுக்கு முன்னரே வெளியிட்டுள்ளேன் என்பதையும் இங்கே பதிவு செய்து கொள்கின்றேன்.
ஜகாத் விஷயத்தில் குர்ஆன் மற்றும் ஹதீஸிற்கு எதிரான உங்களது நிலைபாட்டில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டிய ஒரே காரணத்திற்காக மிரட்டல்கள், அவதூறுகள் என் மீது அள்ளிவீசப்பட்டு பல்வேறு தொந்தரவுகள் தொடர்ந்து தரப்பட்டு கொண்டிருக்கும் நிலையிலும், கடந்த சுமார் 10 மாதங்களுக்கு மேலாக வெள்ளிமேடை, இணையதளம், மாத இதழ், தனிமனிதர்கள் சந்திப்பு என அனைத்து வழிகளிலும் தொய்வின்றி தொடர்ந்து பகிரங்கமாக இப்பிரச்சாரத்தைச் செய்து வருகின்றேன். அல்ஹம்து லில்லாஹ்.
இவ்வாறு நான் பல மாதங்களாக பிரச்சாரம் செய்து வருவதை உங்கள் இயக்கத்தின் தற்போதையத் தலைவரும் நன்கு அறிவார். இந்த கடந்த பத்து மாத காலங்களில் விவாதத்திற்கு வரும்படி அழைத்து எந்த விதமான கடிதத்தையும் எனக்கு நீங்கள் எழுதவில்லை என்பது முக்கியமான விஷயம்.
நான் இந்தப் பிரச்சனையை முன் வைத்து சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு குறிப்பாக அல்ஜன்னத்தில் எனது ஆய்வுக் கட்டுரை வெளியாகி இரண்டு மாதம் கடந்ததன் பின் நீங்கள் இவ்வாறு எழுதியுள்ளது T.N.T.J-யின் தாயிஃப் கிளைத் தலைவரின் வற்புறுத்தலால்தானோ என்ற சந்தேகத்தை வரவழைக்கிறது.
ஏனெனில், (ஊதியமின்றி) நான் பணியாற்றி வரும் அல்சலாமா இஸ்லாமிய நிலையத்தைத் தவிர, தாயிஃபில் மக்கள் கூடும் வேறு பொது இடங்களில் விவாதிக்கத் தயாரா? என்று 27-01-06 வெள்ளிக்கிழமை மாலை தொலை பேசியின் மூலம் T.N.T.J-யின் தாயிஃப் கிளைத் தலைவரான சகோதரர் அப்பாஸ் அவர்கள் என்னிடம் அறைகூவல் விடுத்தார்.
04-02-06 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு நீங்கள் வாருங்கள். நேரடியாக அமர்ந்து நாம் பேசி ஒரு முடிவுக்கு வந்து, எழுத்து மூலம் உறுதி செய்து கொள்வோம் என்று அப்போது கூறினேன். வருவதாகக் கூறிய அந்த வெள்ளிக் கிழமை அவர் வரவில்லை.
'தாயிஃபில் உள்ள ஒட்டு மொத்த தவ்ஹீத் சகோதரர்களில் நாங்கள் இருவர் சொன்னால்தான் எதையும் ஏற்க வேண்டும். மற்றவர்களில் யார் எதைக் கூறினாலும் அதை ஏற்கக் கூடாது, காரணம் மற்றவர்கள் சரிவர தவ்ஹீத் தெரியாதவர்கள் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு தவ்ஹீத் அறிஞர், 'எங்களில் நான்கு நபர் வருகின்றோம், உங்களில் நான்கு நபர் வாருங்கள் மக்காவில் விவாதத்தை வைத்துக் கொள்வோம்' என்று பலரது முன்னிலையில் எனக்கு அறைகூவல் விடுத்திருந்தார். நீண்ட நாட்களாகியும் இது குறித்த எந்த ஒரு தகவலையும் எனக்கு இது வரை அவர் தெரிவிக்கவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.
04-02-06 வெள்ளிக்கிழமை வருவதாக வாக்களித்திருந்த தாயிஃப் கிளைத் தலைவர் சகோதரர் அப்பாஸ் அவர்கள், அன்று வராமல் அதற்கு அடுத்த வாரம் 10-02-06 தேதி அன்று வந்துதான் மேற்சொன்ன சம்பவத்தை அரங்கேற்றினார். விவாதம் என்று ஆரம்பித்தால் ஏதாவது முன்னுக்குப் பின் முரணாக நிகழ்வது என்பது இப்போழுதே தொடங்கிவிட்டதாகவே நான் உணர்கிறேன்.
மேலும், நான் வெளிநாட்டில் இருந்து வருவதை நன்கு அறிந்து கொண்டு, எழுத்து முறையிலான விவாதம் நம்மிடையே நடந்து வருகின்ற இந்த வேளையில் நேரடி விவாத்திற்கு வரும்படி என்னை நீங்கள் அழைத்திருப்பதிலும் ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ என்று என்னுள் ஏற்படும் ஐயத்தில் நியாயம் இருப்பதாகவே உணர்கின்றேன்.
எனினும், நான் தற்போது வெளிநாட்டில் இருப்பதாலும், எப்போது என் பயணம் இருக்கும் என்பது குறித்து உறுதியாக, இறுதி செய்ய முடியாத நிலையில் உள்ளதாலும், விவாதத்திற்கு வருவது பற்றிய எந்த ஒரு தகவலையும் முன்கூட்டியே தருவதற்கு இயலாத நிலையில் இருந்து வருகிறேன்.
எனினும், சத்தியம் அனைவருக்கும் தெளிவாகும் வரை பேனா முனையில் நாம் செய்து வரும் இந்தக் கருத்துப் பரிமாற்றங்களை கைவிட்டு விடாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். எழுத்து முறையிலான இப்பரிமாற்றங்களை தவறு என்று நீங்கள் வாதிக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.
மேலும், விவாதத்தின் மூலம் எதை சாதிக்க முடியுமோ அதைவிட பன்மடங்கு எழுத்தின் மூலம் சாதிக்க முடியும் என்பதை என்னை விட நீங்கள் நன்கு அறிந்து வைத்திருப்பீர்கள் என்றே கருதுகிறேன்.
எழுத்துமுறையிலான கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் இறைமார்க்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்கு கீழ்கண்ட சமீபகாலத்து நிகழ்வுகளே சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன என்பதை உங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
1 'துஹ்ரத்தன் லில்அம்வால்' என்று இறைத்தூதரே கூறியுள்ளதாக கடந்த காலங்களில் ஒன்றுக்குப் பல முறை வேண்டுமென்றே பிரச்சாரம் செய்து வந்த உங்களது கருத்தை, இறைத்தூதரின் கூற்றல்ல என்று தற்போது பகிரங்கமாக வாபஸ் வாங்கிக் கொண்டு விட்டீர்கள்.
2 ஒருவன் 'தொடர்ந்து ஜகாத் வழங்குவதால் விரைவில் பிச்சைக்காரனாக மாறி, அவன் பிறரிடம் கையேந்தும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவான் என்று குர்ஆனுக்கும், சுன்னாவிற்கும் எதிராக உதாரணம் என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தி, கடந்த காலங்களில் தொடர்ந்து தீவிரமாகச் செய்து வந்த தீய பிரச்சாரத்தை இனிமேல் உதாரணத்திற்குக் கூட ஒரு போதும் அவ்வாறு அறவே கூற மாட்டோம் என்று சபதம் ஏற்றுள்ளீர்கள்.
3 'ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் ஜகாத்' என சட்டத்தை எளிமையாக்கினால் எல்லோரும் ஜகாத் வழங்கி விடுவார்கள் என்று சட்டம் பேசி வந்ததை இனிமேல் ஒரு போதும் மறந்தும்கூட கூற மாட்டோம் என்று மாற்றி வாசிக்க ஆரம்பித்து விட்டீர்கள்.
4 வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என அபூ தாவூதில் மட்டுமல்ல உலகில் உள்ள எந்த நூலிலும் அப்படி ஒரு ஹதீஸ்; இல்லை என்று ஆணித்தரமாகப் பிரச்சாரம் செய்து வந்த நீங்கள், மக்கள் இதை நம்ப வேண்டும் என்பதற்காக, அவ்வாறு ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டினால் ஒரு இலட்சம் ரூபாய் பரிசு தருவதாகவும் ஒரு நிகழ்ச்சியில் சவால் விட்டிருந்தீர்கள், தற்போது இந்த ஹதீஸ் பல நூல்களிலும் பதிவாகி இருப்பதாக நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள்.
5 கால்நடைகள், ஆபரணங்கள் ஆகியவற்றைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களுக்கும் மீண்டும் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் என்றுதான் கூறிவருகிறோம் என (இப்னு ஹஸ்மின் நூலில் எழுதப்பட்ட தகவலை ஏற்றுக் கொண்டு மேற்கோள் காட்டியதன் மூலம்) உங்களை அறியாமலேயே மாபெரும் ஒரு உண்மையை நீங்கள் ஏற்றுக்கொண்டு விட்டீர்கள்.
6 அம்ர் பின் ஹாரிஸ் விஷயத்தில் இமாம் தஹபி கூறியதை மொழியாக்கம் செய்ததில் தவறிழைத்து விட்டதாக நீங்களே எழுத்தின் மூலம் ஒப்புக் கொண்டுள்ளீர்கள்.
ஆக, உங்களது நிலைபாட்டை வலியுறுத்த கடந்த காலங்களில் பல்வேறு மேடைப் பிரச்சாரத்தின் மூலம் ஒன்றுக்கு பலமுறை நீங்கள் எடுத்து வைத்த சான்றுகள் அனைத்தையும் தவறானவைதான் என்பதை நீங்களே பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்டீர்கள்.
தற்போது சான்றுகள் இல்லாத உங்களது வெற்றுவாதம் மட்டும்தான் மிஞ்சி நிற்கிறது. இன்ஷா அல்லாஹ் அதையும் விரைவில் வாபஸ் வாங்கி விடுவீர்கள் என்றே எண்ணுகின்றேன். பொதுமக்களும் அவ்வாறே கருதுகிறார்கள்.
இம்மாற்றத்திற்கான காரணம் எழுத்து முறையிலான கருத்துப் பரிமாற்றம்தானே தவிர, வேறில்லை என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்றே நம்புகின்றேன்.
இந்த வகையில் எழுத்திலான கருத்துப் பரிமாற்றம் பன் மடங்கு சிறந்தது என்பதை உணர்ந்தே எழுத்தின் மூலம் உங்களது நிலைபாட்டில் உள்ள தவறுகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றேன். (ஜனவரி (2006) மாத ஏகத்துவம் இதழுக்கான மறுப்பும் இணையதளத்தில் வெளிவந்து விட்டது)
விவாதத்தை விட எழுத்து வகையிலான கருத்துப் பாரிமாற்றங்கள்தான் உலகளவில் அனைவரையும் விரைவில் சென்றடையக் கூடிய தெளிவான ஆரோக்கியமான வழிமுறையாக உள்ளதால், எழுத்து முறையிலான இந்தக் கருத்துப் பரிமாற்றங்களுக்கு நீங்கள் அவசியம் முன் வர வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த வேண்டுகோளை மறுக்க மாட்டீர்கள் என்றே எதிர்பார்க்கிறேன்.
மார்க்க விஷயத்தில் ஏற்படும் தவறுகள் சுட்டிக்காட்டப்படுவதன் நோக்கம் அனைவரும் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே. எங்களது நிலைபாட்டில் உள்ள தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்டும் போது அதை அடக்கத்துடன் ஏற்றுக் கொள்வோம் என்பதையும் இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.
எனது பெயரில் நீங்கள் அனுப்பிய கடிதம் பலரது முன்னிலையில் பகிரங்கமாக படித்துக்காட்டப்பட்டு விட்டதால் அதற்கான எனது பதில் கடிதம் 24-02-06 அன்று ஜும்ஆத் தொழுகைக்குப் பின் அனைவரின் முன்னிலையிலும் படித்துக்காட்டப்பட்டு எனக்குக் கடிதம் கொண்டு வந்த T.N.T.J-யின் தாயிஃப் கிளைத் தலைவர் அப்பாஸ் அவர்கள் வசமே ஒப்படைக்கப்படும்.
உண்மையை உண்மை என்று நமக்குப் புரிய வைத்து அதை செயல்படுத்துவதற்கும், தீமையைத் தீமை என்று அறிய வைத்து அதை தவிர்ந்து நடப்பதற்கும் அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
குறிப்பு:
கடந்த 24-02-06 வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்கு முன்பே இக்கடிதத்தை ஒப்படைத்து விட்டு, தொழுகைக்குப் பின் அனைவரது முன்னிலையிலும் படித்துக் காட்ட வேண்டுமே என்று விரும்பி சகோதரர் அப்பாஸ் அவர்களுடன் கடிதத்தைப் பெற்றுக் கொள்ளும் படி அழைத்த போது, தான் மதீனாவில் இருப்பதாகவும், என அண்ணன் அக்பர் அலி அல்லது முஹம்மது அலி ஆகியோரில் யாராவது ஒருவர் வசம் ஒப்படைத்து விடும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி அவரது அண்ணன் அக்பர் அலியும், முஹம்மது அலி என்பவரும் ஜும்ஆத் தொழுகைக்கு வந்திருந்ததை அறிந்து அக்பர் அலி அவர்களை அழைத்த போது அவர் வராததால், முஹம்மது அலியை அழைத்து கடிதத்தைப் பெற்றுக் கொண்டதற்கு அடையாளமாக கையெழுத்து வாங்கிக் கொண்டு அவரிடம் ஒப்படைத்து விட்டேன்.
ஜும்ஆ தொழுகை முடிந்து அதைப் படித்துக் காட்டிய பின் T.N.T.J-யின் தாஃயிப் கிளைத் தலைவரின் அண்ணன் அனைவரது முன்னிலையிலும் பிரச்சனையோடு சம்பந்தப்படாத விஷயங்களைக் கூறி தரக்குறைவான தனிமனித விமர்சனத்தில் இறங்கி அநாகரீகமாக நடந்து கொண்டதோடு, கடிதத்தைப் பெற்றுக் கொண்ட முஹம்மது அலியையும் கண்டித்து கடிதத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி கூறி, கடிதத்தை என் வசமே திருப்பி ஒப்படைத்து விட்டனர். தொழுகையில் கலந்து கொண்ட அனைவரும் 'இது அத்துமீறிய அநாகரீகமான செயல் என்று கூறிக் கொண்டே' பள்ளியிலிருந்து வெளியேறினர்.
'T.N.T.J-யின் தலைவர் நானில்லை' என்று அப்பாஸ் அவர்களே பகிரங்கமாக மறுத்துவிட்ட நிலையில் 'T.N.T.J-யின் தாயிஃப் கிளைத் தலைவர்' என்று நீங்கள் எவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டு எழுதலாம் என்று கடுமையான ஆட்சேபணையை செய்து, கடிதத்தில் எழுதப்பட்ட வாசகங்களிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லாததால் அதை வாங்க விரும்பவில்லை என்று வாங்க மறுத்ததற்கான காரணமாகக் குறிப்பிட்டார்கள்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன் 26-11-04 தேதியிட்ட உணர்வு வார இதழில் வெளியான T.N.T.J-யின் தாயிஃப் கிளை நிர்வாகிகள் பட்டியலில் அப்பாஸ் அவர்களது பெயர்தான் தலைவர் என்று இடம்பெற்றிருந்தது, மேலும், தற்போது அவரது பெயருக்கே கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது என்ற விபரத்தை குறிப்பிட்டு விளக்கமளித்தேன். அதில் அவர்கள் திருப்தி அடையாமல், பேப்பரில் வந்த செய்தியை கொண்டு வரும்படி சவால் விட்டார்கள் என்பதையும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.
அதன் பின் T.N.T.J-யின் தாயிஃப் கிளைத் தலைவர் அப்பாஸ் அவர்களுடன் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறி நீங்கள் கடிதத்தைப் பெற்றுக் கொள்ளவில்லையானால், நானே நேரில் அனுப்பி வைத்து விடுவேன் என்றும் கூறினேன்.
அதற்கு அவர், நான் தாயிஃப் வந்ததும் உங்களுக்குத் தகவல் தருகிறேன் என்று கூறினார். 28-03-06 செவ்வாய் மாலை வரை அவரிடமிருந்து எவ்வித தகவலும் இல்லாததால் நானே மீண்டும் அவருடன் தொடர்பு கொண்டு விபரம் கேட்ட போது, வெள்ளிக்கிழமை வந்து கடிதத்தை படித்துப் பார்த்து விட்டுத்தான் வாங்கிக் கொள்வேன் என்றார்.
T.N.T.J-யில் தான் எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை என்று பகிரங்கமாகக் கூறிவிட்ட இவர், விவாதக்குழு ஒருங்கிணைப்பாளராகவுள்ள உங்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தை படித்துப் பார்த்து விட்டுதான் பெற்றுக் கொள்வேன் என்று கூறுவது என்ன நாகரீகமோ எனக்குத் தெரியவில்லை.
பகிரங்கமாக படித்துக் காட்டப்பட்ட ஒரு கடிதத்தை படித்துப் பார்ப்பேன் எனக் கூறுவதில் என்ன தவறு என்று நீங்கள் கருதலாம். அவ்வாறு படித்துக் காட்டப்பட்ட ஒரு கடிதத்தை இவர் தனியாகப் படித்துப் பார்க்க வேண்டிய அவசியம்தான் என்ன? விபரம் தெரியவில்லையெனில் தனது சார்ப்பாக அனுப்பி வைத்திருந்த தனது அண்ணன் அக்பர் அலி, மற்றும் முஹம்மது அலி ஆகியோரிடம் கேட்டு அறிந்து கொள்ளலாமல்லவா? மேலும், கடிதம் எழுதிய நான் இதை விரும்பாத நிலையில் படித்துதான் பார்ப்பேன் என்று கூற அவருக்கு என்ன உரிமையுள்ளது?
இக்கடிதம் உங்களுக்கு எழுதப்பட்டதல்ல. மாறாக, விவாதக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் அப்துன்னாஸிர் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதம். அவர் எனக்கு எழுதிய கடிதத்தை என்னிடம் சேர்த்து வைத்தது போல், நான் அவருக்கு எழுதிய கடிதத்தையும் அவர் வசம் சேர்த்து வைப்பதுதான் உங்களது பணி. விருப்பமிருந்தால் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்! இல்லையெனில் விபரம் தெரிவித்து விடுங்கள்! நான் நேரில் அனுப்பிவிடுகின்றேன் என்று கூறினேன்.
03-03-06 வெள்ளிக்கிழமையன்று பெற்றுக் கொள்வதாகக் கூறிய T.N.T.J-யின் தாயிஃப் கிளைத் தலைவர் அப்பாஸ் அவர்கள், அன்றைய தினம் வந்து மீண்டும் ஆட்சேபணை செய்து, கடிதத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். எனவே, இக்கடிதத்தை ஈ-மெயில், மற்றும் அஞ்சல் ஆகிய மூன்று வழிகளிலும் உங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். (ஃபேக்ஸ் அனுப்ப முயற்சித்து முடியாமல் போய்விட்டது, இருந்தாலும் மீண்டும் முயற்சி செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்).
மார்ச் 15ம் தேதிக்குள் எனது பதில் கடிதம் வந்து சேர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது போன்ற தேவையற்ற பிரச்சனைகளை இவர்கள் ஏற்படுத்திய காரணத்தால் உங்களுக்கு கடிதம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதையும் உங்களது கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
இப்படிக்கு
மவ்லவி, எம். நூர் முஹம்மது பாகவி,
Post Box No:204, Taif, K.S.A.,
Email:fazilbaqavi@gmail.com
Tel:(966 2)7374374, Cell: 0509746919, Fax: (966 2)7374274
